பல கேள்விகளுக்கு புண்ணகையையே பதிலாக்கினாள். ஒரே புண்ணகை. எந்த கபடமும் அற்றது.
கருத்து கேட்பு கூட்டத்தின் பாதியிலேயே எழுந்து சென்ற போது, 'ஏன் பாட்டி பாதியில போறீங்க?' என்று வாயிலில் ஒருவன் கேட்ட போதும், அதே புண்ணகை.
"இல்லை பாட்டி இன்னும் கொஞ்ச நேரத்துல முடிஞ்சுடும். ஏதாவது வண்டி வச்சு வீட்டில இறக்கி விட்டுடறேன்"
அவனை சிறிது விநாடி உற்றுப் பார்த்த பின் சொன்னாள்:
"இல்லபா. இவங்க பேசற பலது புரியல, ஆனா ஊருக்கு நல்லதுனு சொல்றாங்கனு தெரியுது. நான் இருந்து அதை கெடுக்கவா போறேன? நடந்து பழகிடுச்சு."
மீண்டும் அதே புண்ணகையோடு அவனை கடந்து சென்றாள்.
ஆனால் இது நடந்து ஒரு வருடத்திற்கு மேல் இருக்கும். திடீரென்று நேற்று வந்து சொன்னார்கள், இன்றைக்கு சில அதிகாரிகள் வருவார்கள் என்று. பல விதமான அதிகாரிகளைப் பார்த்து பழகியதால் அது ஒன்றும் பெரிதாக தோன்றவில்லை.
'ஆனால், ஏன் என்னை பாக்கனும்?'
வழக்கம் போல விளக்கை ஏற்றிவிட்டு வாசலில் இருந்த மண் திண்ணையில் அமர்ந்தாள். தெரு கோடியில் பேண்ட் சட்டை போட்ட நான்கைந்து பேர். சற்று தள்ளி ஒரு ஜீப். அதில் ஏதோ எழுதியிருந்தது. அது என்ன என்று படிக்க செண்பகா தேவிக்கு தோன்றவில்லை.
அப்படியே சுவற்றில் சாய்ந்து சில நேரம் கண் மூடி அமர்ந்திருந்தாள்.
'எத்தனை வருடம் ஆயிற்று? எட்டா ஒன்பதா?' நினைவுக்கு வரவில்லை. ஆனால் இத்தனை தூரம் கடப்போம் என எதிர்பார்த்திருக்கவில்லை. காலம் எல்லோரையும் போல தன்னிடமும் சதிராட்டம் ஆடுவதை எண்ணி தனக்குள் சிரித்துக் கொண்டாள்.
மெலிதாக தூறத் தொடங்கியது. மனம் இளமைக்கு திரும்பியது. மழை எவ்வளவு அற்புதமானது? ஆத்திரத்துடன் கொட்டி தீர்த்து வாழ்விடத்தை புரட்டிப் போட்ட போதும், அடுத்த முறை வரும் போது வெறுக்கத் தோன்றியது இல்லை. மழை ஒவ்வொருவருக்குமான நெருங்கிய நட்பு. எத்தனை கூட்டத்தில் இருந்தாலும் எல்லோரும் தனித்தனியே மழையோடு உரையாடுவர்.
ஆனால் இப்போது வெறும் சாரல் மாதிரியானது. சீக்கிரமே நின்று விடும்.
ஒரு பெரு மூச்சு விட்டபடி இடதுபுறம் திரும்பினாள். ஆட்கள் ஒவ்வொரு வீடாக சென்று எதையோ குறிப்பெடுப்பது பொல தோன்றியது. அசவர்களைத் தொடர்ந்தபடி ஜீப்பும் ஊர்ந்து வந்து கொண்டிருந்தது.
ஒருவன் மட்டும் அவர்களுக்கு முன்னரே ஒவ்வொரு வீட்டில் இருப்பவருக்கும் ஏதோ சொன்னபடி நகர்ந்து வந்து கொண்டிருந்தான். நடையை பார்த்தால் முருகன் போல தொன்றியது.
முருகன் சிறு பிள்ளையாக இருக்கும் போது பல நேரம் அவள் வீட்டில் தான் இருப்பான், எப்போதும் அவளை வம்பிழுத்துக் கொண்டே. வீட்டுக்குள் எல்லா உரிமையும் இருந்தும், திருட்டுத் தனமாக மாங்காய் பறித்து திண்பதில் குறியாக இருப்பான். அதோடு நிற்காமல், வீட்டில் இருந்த மூன்று மாமரங்களையும் குத்தகை எடுத்தவனிடம் சென்று மாங்காயை பறித்ததைப் பற்றி சொல்லி பெரிய சிக்கலை உருவாக்குவான்.
ஒவ்வொரு முறையும் செண்பகா தேவி தான் சமாளிப்பாள். ஆனால், அதெல்லாம் அவன் சிறு வயதாக இருக்கும் போது. வளர்ந்ததும் ஆள் மாறிவிட்டான். புதிதாக வேலை கிடைத்து தூத்துக்குடி போன கொஞ்ச நாளிலேயே திரும்பி வந்து விட்டான்.
"உன்னை விட்டு ரொம்ப தூரம் இருக்க முடியல...அதான் திரும்ப வந்துட்டேன்"
"இங்க இருந்து என்ன பண்ண போற?"
"ரியல் எஸ்டேட். வருஷத்துக்கு ரெண்டு மூனு டீல் பண்ணா கூட போதும். ஊருலேயே இருந்தா மாதிரியும் ஆச்சு"
சொன்னது போலவே, திரும்ப அவன் எங்கும் செல்லவில்லை. சொல்லப் போனால் கடந்த ஏழெட்டு வருடங்களில், கிட்டத்தட்ட அனைத்து நாட்களும் அவளுடனே அவள் வீட்டில் தங்கியிருந்தான். ஆனால் கடந்த ஒரு வருடமாக வருகையை குறைத்துக் கொண்டான். பேச்சைக் கூட.
இப்போது கூட ஊருக்குள்ள போடற ரோட்டுக்கு அவன் தான் நிறைய வேலை செஞ்சிருக்கானு பேச்சு. அவளுக்கு மனதுக்கு இதமாக இருந்தது. தனியாக நின்று சாதிக்கிறான்.
புது ஆட்கள், மெதுவாக அவள் வீட்டை நோக்கி வந்தார்கள். முன்னால் வந்த முருகன், அவள் வீட்டு வாசலில் ஒரு கனம் நின்று அவளைப் பார்த்தான். அவன் கண்களில் ஒருவித கலவரம் தெரிந்தது. ஏன் என்று அவளுக்கு புரியவில்லை. எல்லோர் வீட்டிலும் சென்று ஏதோ சொல்லிக் கொண்டு வந்தவன், அவள் வீட்டுக்குள் மட்டும் வரவில்லை. வேகமாக அடுத்த வீடு சென்று ஒளிந்த படி அவளைப் பார்த்தான்.
இவன் ஏன் இப்படி செய்கிறான் என்று செண்பகா தேவி குழம்பியபடி இருக்க, இப்போது புது ஆட்கள் அவள் வீட்டுக்குள் வந்தார்கள்.
"அம்மா. உங்க பேரு?"
"செண்பகா தேவி"
"இந்த இடம் மொத்தம் எத்தனை ஏரியா தெரியுங்களா?"
"தெரியும். 22 செண்ட்"
"பின்னாடி ஏதாச்சும் தோட்டம் இருக்குங்களா?"
"இப்ப இல்ல"
அவர்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டார்கள். வந்தவர்களில் ஒருவன் ஏதோ காகித படிவத்தை வேகமாக நிரப்பிக் கொண்டிருக்க, இன்னொருவன் ஏதோ கணக்குப் போட்டுக் கொண்டிருந்தான்.
செண்பகா தேவி, முதலில் பேசியவரைப் பார்த்து...
"ஆமாம்..இதெல்லாம் ஏன் கேக்கறீங்க? நீங்க ஊருக்கு புதுசா?"
"ஆமாம்மா, நாங்க ஹை வேஸ் டிபார்ட்பெண்ட்டுல இருந்து வர்றோம். புதுசா ரோடு போடறதுக்காக இடங்களை கையகபடுத்துற வேலைய ஆர்ம்பிச்சிருக்கோம்....ஊருல சொல்லியிருப்பாங்களே...?!"
`கையகபடுத்துற வேலை'
இப்போது, செண்பகா தேவியின் முகம் மாறியது. முருகன் இத்தனை நாள் தன்னிடம் இருந்து விலகியதன் காரணம் புரிந்தது. வலது பக்கம் திருப்பி அவனைப் பார்த்தாள். அவள் முகத்தை பார்க்க தெம்பில்லாமல் தலையை மறைத்துக் கொண்டான்.
"சரிம்மா....இந்த இடத்துக்கு ஈடாக முப்பதாயிர ரூபாய் அரசாங்கம் நிர்ணயம் பண்ணியிருக்கு. பணம் பத்தலைனா கோர்ட்டுல பேசி அதிகமா வாங்கிக்கலாம். அதுக்கு நாங்க உதவி பண்றோம்"
"முப்பதாயிரமா? எதுக்கு??"
"புரியுதுமா. உங்களுக்கு தேவையான வசதிகளோட தங்க அரசாங்கமே ஒரு இடம் ஏற்பாடு பண்ணி குடுத்துடும். பட்டாவும் உங்க பேருலேயே இருக்கும். இந்த பணம் இந்த இடத்துக்கான ஒரு நஷ்ட ஈடு மாதிரி"
"இடத்தை மாத்துவீங்களா? அப்ப இங்க இருக்கிறது?"
"தோட்டம் தான் எதுவும் இல்லைனு சொன்னீங்களமா....வேற என்ன இருக்கு?" - சொல்லியபடி பக்கத்தில் இருந்தவரிடம் ஏதோ கேட்க....
"சாமி இருக்கு!"
"ஓ...கோவிலா...மன்னிச்சிக்கோங்க...எனக்கு தெரியாது. எச்சாரென்ஸியில சேந்ததா...."
"இல்லை"
"சரி, என்ன கோவில்?"
"நெல்லையப்பன்"
"சிவன் கோவிலா?"
"இல்லை....நெல்லையப்பன்" - இப்போது சற்று சத்தமாக சொன்னாள்.
"சரிமா...அதுக்கும் சேத்து ஏற்பாடு பண்ணிடலாம்....அரசாங்க செலவிலேயே கோவிலை கட்டிடலாம். உங்களைய ட்ரஸ்டியா போடற மாதிரி ஏற்பாடு பண்ணலாம்..."
"கொவிலை எடம் மாத்துவ...சாமிய எப்படி மாத்துவ...?"
கோபமாக கேட்டுவிட்டு, திரும்பி வேகமாக வீட்டுக்குள் நுழைந்து பின் பக்கம் போய் சடேரென்று சம்மணமாய் விழுந்தாள்.
திடிக்கிட்ட அதிகாரி...மெல்ல பின் பக்கம் சென்று பார்த்தார்....அங்கு அவளுக்கு எதிரே ஒன்னரை அடி உயரத்தில் ஒரு கருங்கல் நடப்பட்டு, அதன் மேல் குங்குமம் வைக்கப் பட்டிருந்தது. குழப்பமானவர், திரும்பவும் முன் பக்கம் வந்தார்.
உடன் வந்தவர்கள் பதறியபடி.....
"இப்ப என்ன செய்யறது ?"
"நாம என்ன பண்ண முடியும். ஊரே ஒத்துகிட்ட பிறகு ஒருத்தரு ஒன்னும் பண்ண முடியாதே...கோர்ட்டுக்கு போனாலும் நிக்காது. இன்னும் டயம் இருக்கே...பாத்துக்கலாம். முருகன் எங்கே?"
இதையெல்லாம் பக்கத்து வீட்டில் இருந்த படி கேட்டுக் கொண்டிருந்த முருகன் திண்ணையில் விழுந்து அழத் தொடங்கினான். ஒச்சாயி பாட்டி, அவனை சமாதானம் செய்ய முயன்றாள்.
"இதுல வர்ற கமிஷன்ல் சாமிக்கு ஒரு கோவிலை கட்டலாம்னு தானே இதுல இறங்கினேன்...இப்ப இப்படி ஆயிடுச்சே ஆத்தா..."
"நீ கவலப்படாதடா....நெல்லையப்பன் உண்மையிலே சாமி தான்...உனக்கும் ஆத்தாவுக்கும் கண்டிப்பா நல்ல வழி காட்டுவான்."
No comments:
Post a Comment