அரும்பாகி....மொட்டாகி....



காயத்திரி தேவி, கண்ணாடியைப் பார்த்து ஒப்பனையை சரி செய்து கொண்டாள். முன்னால் துருத்தியிருந்த ஒரே ஒரு வெள்ளை முடியை கத்தரித்துவிட்டு, தலைமுடியை சரி செய்தாள்.  குடுவையில் இருந்து இரண்டு மாத்திரைகளை எடுத்து விழுங்கி தண்ணீர் குடித்து விட்டு, கையை திருப்பி நேரம் பார்த்தாள். 

இன்டெர்காம் ஒலித்தது. பேசிவிட்டு வந்து மீண்டும் கண்ணாடி முன் வந்து நின்றாள். சிறிது நேரம் கண்ணாடியில் தன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். 

'இன்று புதிதாய் பிறந்தோம்'

பக்கத்தில் படுக்கையில் படுத்திருந்த கௌதம், புரண்டு படுத்தான். கண்ணாடியில் தன் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்கும் தேவியை, அவனும் சிறிது நேரம் பார்த்தான். ஒவ்வொரு நாளும் புதிதாய் பிறக்கும் மலர் போல இருக்கும் அவள் அழகுக்கு அவள் உள்ளமே காரணம் என ஆழமாக தொன்றிற்று.

"இன்னிக்கி சர்ஜரி இருக்கா?"

காயத்திரி தேவி, திரும்பி அவனைப் பார்த்து மெலிதாக சிரித்தாள்.

"ஆமாம். மூனு இருக்கு. எட்டரை மணிக்கு உத்திராடம் முடியுது. அதுக்குள்ள முடிக்கனும். உத்திராடத்தில் ஒரு பிள்ளை உணவுக்கு பஞ்சமில்லை"

சொல்லிவிட்டு மிக பலமாக சிரித்தாள்.

"ஏன் கிண்டல் பண்ற...ஒவ்வொருத்தருக்கு ஒரு நம்பிக்கை"

"நான் கிண்டல் பண்ணல...போன வாரம் வரைக்கும் குழந்தை பத்திரமா பொறக்குமானு சந்தேக பட்டவங்களுக்கு, அது கண்ஃபர்ம் ஆனதும் தான் நட்சத்திரம் ஞாபகம் வருதுனு நெனச்சேன். அதான். யாரும் எதையும் எப்பவும் முழுசா நம்பறதில்லை"

"எல்லோரும் உன்னை மாதிரி இருக்க மாட்டாங்க, தேவி"

அவள் சிரிப்பு  நின்றது. கௌதமை வெற்றுப் பார்வையால் துளைத்தாள். இது நேற்றைய வாதத்தின் தொடர்ச்சியோ என்று தோன்றியது.

அவனுக்கோ, அசந்தர்ப்பமாக சொல்லிவிட்டோமோ என்று பட்டது. ஆனாலும், அது தவறு என்று சமாதானம் சொல்ல தோன்றவில்லை. அவளுக்கு அது பிடிக்காது. மெதுவாக கட்டிலில் இருந்து இறங்கி, பாத்ரூமை நோக்கி நடந்தான். கதவை திறந்து விட்டு, திரும்பி அவளைப் பார்த்து, "நான் எதையும் யோசிச்சு சொல்லலை...அதனால நீ போயி வேலைய பாரு" என்றான்.

அவள் ஒன்றும் பேசாமல், லேசாக சிரித்து விட்டு, தன் பையை எடுத்துக் கொண்டு, வீட்டை விட்டு வெளியே வந்தாள்.

சாய் தேவி மருத்துவமனை, நகரின் பிரதான சாலையில் இருந்தாலும், உள்ளே நுழைந்து விட்டால், அவ்வளவு அமைதியாக இருக்கும். காயத்திரியும், கௌதமும் பார்த்து பார்த்து கட்டியது. சுற்றிலும் உள்ள சுவரின் வெளிப் புறத்தில் கிளாஸ் உல் பலகைகள் மூலம் வெளிஒலியை அதிக அளவில் வடிகட்டியிருந்தார்கள்.  கட்டிடம், கிழக்கும்-மேற்குமாக இருந்ததால், வெப்பமும் சிறிது நேரமே கட்டிடத்திற்குள் ஊடுறுவும். ஆங்காங்கே நீரூற்றுகளை வைத்து, அதனையும் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். மெல்லிய இசை எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும். அந்த இசையை அனுபவித்தபடி, நான்காவது மாடியில் இருந்த வீட்டில் இருந்து படிகட்டு வழியாக இரண்டாம் மாடியில் உள்ள ஆபரேஷன் தியேட்டருக்குள் நுழைந்தாள் காயத்திரி.

இன்றைய நாளின் இனிய தொடக்கம்.

எட்டு மணிக்கெல்லாம்  பரபரப்புத் தொற்றிக் கொண்டது. வேலைக்கு செல்லும் பெண்கள் வசதிக்காக காலை நேரம் ஒதுக்கப் பட்டிருந்தது. எவ்வளவு படபடப்புடன் அவர்கள் உள்ளெ நுழைந்தாலும், அந்தச் சூழல் அவர்களையும் அறியாமல் ஒருவித அமைதியை கொடுக்கும். காயத்திரியும் அவள் பங்குக்கு துரிதமாக செயல் படுவாள்.

அவர்களின் முறை முடிந்ததும், கருவுற்ற பெண்களின் மாதந்திர சோதனைகள், உணவு இடைவேளைக்குப் பிறகு, முதல் முறை வருபவர்கள், பின்னர் மீண்டும் கருவுற்ற பெண்களின் சோதனை என காயத்திரியாக வகுத்துக் கொண்ட  தினசரி அட்டவணை. நேரம் கிடைக்கும் போது இரண்டு முறை மருத்தவமனையில் தங்கியிருக்கும் பெண்களை சென்று பார்ப்பாள். அதனாலேயே பொதுவாக அறுவை சிகிச்சைகளை காலையிலேயே முடித்து விடுவாள். யாராவது, நேரம் குறித்து வந்து கேட்கும் போது, அவர்களுக்காக அந்த நேரத்தில் செய்வாள். ஆனால் அது அரிதாகவே நடக்கும். ஏனெனில், அங்கு வருவோர்கள் ஒரு குழந்தை வராதா என்கிற ஏக்கத்தின் உச்சத்தில் இருப்பவர்கள். அவர்களுக்கு பொதுவாக நேரம் முக்கியமாக படாது. தவிர, காயத்திரி சுகப் பிரசவத்திற்கு முன்னுரிமை கொடுப்பாள். அதற்காகவே நன்கு தேர்ந்த ஆயாக்கள் அங்கு பணியில் உண்டு.

அன்றும் காலையில் வழக்கமான பணிகளை முடித்துக் கொண்டு வந்து தனது நாற்காலியில் அமர்ந்து தன் மற்ற பணிகள துவக்க தயாரானாள். 

"மேடம் தாய் டிவியில இன்னிக்கி இண்டெர்வியூ ஃபிக்ஸ் பண்ணியிருக்கு. கண்ஃபர்ம் பண்ணிடலாமா?"

காயத்திரி, சரி என்பது போல் தலையசைத்தாள். 

"ஸ்கேனுக்கு வரச் சொல்லலாமா?"

“ஒரு பத்து நிமிஷம். பஸ்ஸர் அடிச்சதும் வரச் சொல்லு"

ஸிஸ்டர் வெளியே சென்று கதவை சாத்தினாள். 

காயத்திரி, டிராயரில் இருக்கும் Insulin injection எடுத்து. இடுப்பில் போட்டுக் கொண்டு, சிறிது நேரம் கண்ணை மூடி நாற்காலியில் சாய்ந்து கொள்கிறாள். மெல்ல முந்தின நாள், கௌதமுடன் பேசியதை அசை போட்ட படியே, கண்களை சுழல விட்டாள்.

சீராக அடுக்கி வைக்க்கப் பட்ட மேஜையின் ஒரு ஓரத்தில், முருகன் படமும், ஷீரடி சாயிபாபாவின் படமும் வைக்கப் பட்டிருந்தன. சுவற்றில் ஒரு குழந்தை படமும், அதன் இருபுறமும் இரண்டு போஸ்டர்கள் ஒட்டப் பட்டிருந்தன. விதவிதமான போஸ்டர்கள் சுவரை அலங்கரித்துக் கொண்டிருந்தன.

“We had a dream and it was you...We made a wish and you came true” 

“The Wisdom and compassion a woman can intuitively experience in childbirth can make her a source of healing and understanding for other women”

மேஜையில், Dr Carl Wood எழுதிய Gynaecological Operative Laparoscopy புத்தகம் பாதி படித்த நிலையில் இருந்தது.

மேஜை கடிகாரம் 9:00 காட்ட, பஸ்ஸரை அழுத்துகிறாள். 

இயந்திரம் சுழல ஆரம்பித்தாலும், அவளது முகத்தில் மட்டும் மாறாத புண்ணகை. அது தனது பதினாறாவது வயதில், ஜெனிஃபர் டீச்சர் சொல்லிக் கொடுத்தது. வெறும் ஆசிரியை நிலை தாண்டிய அற்புத உறவு அது. அன்றைக்கு மட்டும் டீச்சர் இல்லை என்றால், இன்றைக்கு இந்த காயத்திரி தேவி இப்படி இருந்திருக்க மாட்டாள். 

திருமணமாகி பல வருடங்கள் குழந்தை இல்லாதவர்கள், குறைந்த காலம் என்றாலும் வீட்டில் இருப்போரின் அழுத்தத்தின் காரணமாக அங்கு வருபவர்கள், உடல் ரீதியான குறைபாடு உள்ளவர்கள் என பலதரபட்ட ஆட்களை தினப் படி சந்தித்தும், அவளுக்கு துளியும் சங்கடம் இல்லை. சிரித்த படி எல்லாவற்றையும் சமாளித்து கைராசி டாக்டர் என்று பெயர் பெற்ற அவளுக்கு, கௌதமுக்கு என்ன பதில் சொல்வது என்பது மட்டும் விளங்கவில்லை. காலம் எப்போதுமே ஒரே மாதிரி சுழலாது என்று ஆணித்தரமாக நம்பும் சீதாவின் அமைதியும் அவளை வாட்டியது. தனது ஒரே மகனுக்கு இன்னும் குழந்தை இல்லையே என்கிற எந்த வித சலனுமும் சீதாவின் சிந்தனையிலும் செயலிலும் இருப்பதாக தெரியவில்லை. அது காயத்திரிக்கு மேலும் அழுத்தம் கொடுத்தது. ஒரு முடிவு எடுக்கலாம் என்று நினைத்து தான் ஜெனிஃபரை சந்திக்க தகவல் அனுப்பினாள். காரணமின்றி முதல் முறை மயங்கி விழுந்ததில் தொடங்கி, தொடர்ந்து நடந்த பரிசோதனைகளும், அதன் முடிவுகளும், எல்லாவற்றையும் தெரிந்து கொண்ட பின்னர் ஜெனிஃபர் அவளை அணைத்து ஆறுதல் சொல்லியதிலிருந்து அவளது வாழ்வின் ஒவ்வொரு படியிலும் ஜெனிஃபர் இருந்தார்.

கௌதம் முதல் முறையாக காயத்திரியிடம் மனம் திறந்து திருமணம் பற்றி பேசிய போதும், ஜெனிஃபரே அவனிடம் முழுமையாக பேசினார். முதலில் அதிர்ந்த கௌதம், பின்னர் காயத்திரியின் கடந்தகால பிரச்சனைகளயும், இப்போதைய அவளது மனநிலையயும் அறிந்து பெருமை கொண்டான். அவன் மனதில் அவள் ஒரு விஸ்வரூபம் காட்டி நின்றாள். அந்த நொடியில் தான் அவனும் வாழ்க்கையை நேசிக்கத் தொடங்கினான். 

நேஹா, மூண்று கேமிரா கோணங்களையும் சரி பார்ததாள். மனோஜ், இன்ஸிடெண்ட் லைட் மீட்டரை வைத்து, வெளிச்சததை சரி பார்த்துக் கொண்டான். ஷாலினி, ஒரு முறை, கேட்க வேண்டிய கேள்விகளின் ஆர்டரை சரிபார்தது, சில திருத்தஙகளை செய்து கொண்டாள்.

அறைக்குள் ஜெனிஃபர் நுழைந்து, நேஹா அருகில் சென்று நின்றார். 

"ஹலோ ஆண்டி. வர மாட்டேனு சொன்னீங்க?

"அப்படித் தான் சொன்னேன். காயத்திரி தான் கூப்பிட்டது. நிகழ்ச்சி எவ்வளவு நேரம் ஆகும்?"

"பன்னெண்டு நிமிஷத்துக்கு தான் ஃபுட்டேஜ் தேவைப்படும். கெஸ்ட் கம்ஃப்ர்டபிளா ஃபீல் பண்ணினா...ஒரு மணி நேரத்துல வைண்ட் அப் பண்ணிக்கலாம்"

ஜெனிஃபர் கை கடிகாரத்தில் மணி பார்த்துக் கொண்டார். திடீரென்று ஏன் கூப்பிட்டாள் என்று தெரியவில்லை. என்னவோ இருக்கிறது. இல்லை என்றால் அவ்வளவு அழுத்தம் கொடுத்திருக்க மாட்டாள்.

யோசித்த படியே, ஒரமாக இருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்து மொபைலை திறந்தார்.

காயத்திரி அவர் வாழ்க்கைக்குள் வந்தது தற்செயலா என்று தெரியவில்லை. ஆனால் பார்த்த உடனே ஒரு பந்தம் உருவாயிற்று. பதினொன்றாம் வகுப்பிற்காக புதிதாக பள்ளியில் சேர்ந்தவர்களில் காயத்திரியும் ஒருவள். கெமிஸ்ட்ரி பாடம் சொல்லிக் கொடுத்த ஜெனிஃபர் தான், வகுப்பு ஆசிரியையும் கூட. புத்திசாலியாக தெரிந்த காயத்திரி, அவ்வப்போது, எல்லோரிடம் இருந்தும் விலகி, தனிமையை நாடுவதை வழக்கமாக கொண்டிருந்ததை, ஜெனிஃபர் கவனிக்கத் தவறவில்லை. மெதுவாக பேச்சுக் கொடுத்துப் பார்த்தார், ஆனால் அவர் கேட்ட கேள்விகளுக்கான பதிலைத் தவிர வேறு எதுவும் காயத்திரி சொல்ல மாட்டாள்.   

லேபில் ஒரு நாள் காயத்திரி திடிரென்று மயங்கி விழுந்ததை முதலில் சாரு தான் பார்த்து, ஜெனிஃபரிடம் சொன்னாள். மயக்கம் தெளிந்த அவளை தனியே அழைத்துச் சென்று விசாரித்த போது தான் தெரிந்தது, காயத்திரி அப்போது தான் ருதுவானாள் என்பது. அடக்க மாட்டாமல் அழுத காயத்திரியை மெதுவாக தேற்றினார் ஜெனிஃபர்.

காயத்திரிக்கு தந்தை சிறு வயதிலேயே இறந்து விட்டார். குழந்தையான அவளுக்கு பேச்சு வரவும் மிக தாமதமானது. திடீர் திடிரென்று உடல் மெலிவதும், பின்னர் எடை கூடிவதும் மாறி மாறி நடந்தது. பல மருத்துவர்களைப் பார்த்தும் விளங்கவில்லை. கடைசியில் டாக்டர் ரவிச்சந்திரன் தான், அவளுக்கு இருந்த மரபணு குறைபாட்டினை கண்டறிந்து சொன்னார். தந்தை வழியில் தலைமுறைகளை கடந்து வரும் ஒரு குறைபாடு. இது தான், இப்படித் தான் என சொல்ல முடியாமல், ஒவ்வொருக்கும் ஒவ்வொரு மாதிரியான விளைவுகள். பொதுவாக ஆண்களுக்கு அதிகம் பாதிப்பு வரும் அந்த குறைபாடு, காயத்திரிக்கும் வந்திருக்கக் கூடும் என ரவி தான் சொன்னார்.

அதனாலேயே வழக்கமான காலம் தள்ளி அவள் ருது ஆனது. அதன் பின்னர் சுழற்சிகளும் ஒரு வரையறைக்குள் இல்லாமல் போனது. ஒவ்வொரு முறையும் நாட்கள் செல்ல செல்ல, அவளுக்கு பைத்தியம் பிடித்தது போல இருக்கும். அவளது தாய் மணிமேகலையோ, தானாக தேடி விரும்பி திருமணம் செய்து பிள்ளைக்கு இப்படி சிக்கல் கொடுத்து விட்டோமே என்கிற கவலையில், பூஜையறையிலேயே ஒடுங்கிவிட்டார்.

ஜெனிஃபர் தான் காயத்திரியின் ஒரே ஆறுதல், ஆசிரியை, தாய் போன்ற நிலைகளைத் தாண்டி, ஒரு நெருங்கிய தோழியாகவே அவளுடன் பழகினார். அவள் வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் நின்றூ கை பிடித்து நகர்த்தி சென்றார். அவளை, மருத்துவம் படிக்கச் சொன்னதும், அவளுக்கு குழந்தை பிறப்பில் இருக்கும் சவால்களை அறிந்து, கைனக்காலஜி எடுக்கச் சொன்னதும் அவரே.

எல்லாவற்றிலும் தெளிவாக சிந்தித்து தீர்க்கமாக முடிவு எடுக்கும் காயத்திரி இன்று மட்டும் ஏன் வரச் சொன்னாள்?

ட்டு ஐம்பது மணிக்கு காயத்திரி உள்ளே நுழைந்தாள். கூடவே கௌதமும். ஜெனிஃபரைப் பார்த்து ஆச்சரியப்பட்ட கௌதம், அவள் அருகில் சென்று அமர்ந்து கொண்டான்.

"டாக்டர், நீங்களும் மேடம் கூட உக்காரலாமே?"

"இல்லை, நீங்க பேட்டி எடுக்க வந்தது காயத்திரி கிட்ட. அவங்க மட்டும் இருக்கட்டும். நாம் சும்மா தான் வந்தேன்"

காயத்திரி நடுவில் இருக்கும் சோஃபாவில் அமர்ந்து, எல்லாம் சரியா என்பது போல கேட்கிறாள். மானிட்டரைப் பார்த்தபடி மனோஜ் கட்டை விரலை உயர்த்தி காட்டுகிறான்.

நேஹா அவளிடம் வந்து, “கேள்விகளை வேணா ஒரு தரம் பாக்கறீங்களா, மேடம்?”

காயத்திரி சிரித்தாள். 

“அப்படி என்ன டஃபா கேக்க போறீங்க ? எல்லாத்துக்கும் பதில் சொல்றேண். ஸ்ட்ரெய்ட்டா பிரோக்ராமுக்கு போயிடலாம்"

விளக்குகள் எரிந்து அறையில் வெளிச்சம் சூழ்ந்தது. 

“தாய் டிவி நேயர்களுக்கு நெஹாவின் அன்பு வணக்கங்கள். இப்ப நீங்க பாக்க போற VIPக்கும் நம்ம டிவி பேருக்கும் ஒரு தொடர்பு உண்டு. யெஸ். இன்றைய விருந்தினர், சென்னையின் மிகப் பிரபலயமான மகப்பேறு மருத்தவர். மகப்பேறு மட்டும் இல்லாமல், குழந்தையிண்மை சிகிச்சையில் சிறந்த அனுபவம் உல்ளவர். அவர் கிட்ட பேசி, அவர் அனுபவத்த உங்களோட பகிர்ந்து கொள்ள – முக்கியமா, நம்ம சேனலின் அன்பிற்கினிய பெண் நேயர்களோடு பகிர்ந்து கொள்ள ஆர்வமா இருக்கேன். வாங்க நிகழ்ச்சிக்கு உள்ளே போகலாம்....வெல்கம் தி ஒன் அண்ட் ஒன்லி டாக்டர் காயத்திரி தேவி......வணக்கம் மேடம்"

“உங்களுக்கும் தாய் டிவி நேயர்களுக்கும் வணக்கம். கேள்விகளை ஆரம்பிக்கிறதுக்கு முன்னால ஒரு சின்ன திருத்தம். இது போன்ற நிகழ்ச்சிகளை பெண்களுக்கானதுனு சொல்லி பிராண்ட் பண்ணாதீங்க ப்ளீஸ். ஆண்களுக்கும் கூட இது தேவை. குறிப்பா, குழந்தை பிறப்பதில் இருக்கும் குறைக்கு பெண்கள் மட்டுமே காரணம் என்கிற அர்த்தமற்ற கருத்து பல காலமா சமூகத்துல பரவியிருக்கு. அங்கிருந்து எல்லாம் மாறினா தான், பிரச்சனைகள் சரியாகும்".

கௌதம், நாற்காலியில் சாய்ந்து கொண்டான். 

“குட் பாயிண்ட் டாக்டர். அது மட்டும் இல்லாம பேட்டிக்கு எனக்கும் ஒரு நல்ல லீட் கொடுத்துட்டீங்க. பொதுவா இந்த மாதிரியான சிகிச்சைகள்ல ஆண்களுக்கான நடைமுறைகள் சிம்பிளாகவும், பெண்களுக்கானது லெபோரியஸாகவும் இடருக்கே...அத பத்தி உங்க கருத்து என்ன"”.

“நீங்களே பதிலையும் சொல்லிட்டீங்க...லேபர் பெயின் வர்றவங்க நடைமுறை லெபொரியஸாகத் தான் இருக்கும். பொதுவா குழந்தை பிறக்குறதுல ஆணின் பங்கு என்பது ரொம்ப முக்கியமானதாக இருந்தாலும் அது ரொம்ப குறுகியது. வைரமுத்து சொன்னது போல "ஆணின் தவிப்பு அடங்கி விடும், பெண்ணின் தவிப்பு தொடர்ந்து விடும்". அது மாதிரி தொடர்கிற தவிப்ப பாதுகாத்து, 9 மாசம் கழிச்சு அந்த தவிப்புகள பலனா வெளிய கொண்டு வருவது பெண்கள் கிட்ட இருக்கிறதால, அதை ரொம்ப கவனமா கையாள வேண்டியிருகிறது. அதனால் வெளி பார்வைக்கு அது லெபோரியஸாக தெரிகிறது"

“பிரமாதம் மேடம். பதில் ரொம்ப சூப்பர். உங்களை பொறுத்தவரை உங்க வேலயில எந்த பகுதி சிரமமானது?”

“சிரமமானது என்றால் Gynecology தான். திரண்டு வர்ற வெண்ணைய தாழிய ஒடைக்காம எடுத்துக் கொடுக்கிறது பெரிய சவால். சிரமமாகவும் இருக்கும் அதை வெற்றிகரமா முடிச்ச பிறகு திருப்தியாகவும் இருக்கும்"

“Fertility treatment பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்..எந்த மாதிரியான சவால் எல்லாம் எதிர் கொள்வீங்க?”

வழக்கமான கேள்விகள், பதில்கள். ஆனால் கூடிய மட்டும் பதிலை சுவையாக தருவதற்கு காயத்திரி முற்படுவாள். எத்தனை பேட்டிகள் இது வரை...ஆனால் ஒவ்வொரு பேட்டியயும் முதல் முறை மாதிரி அவ்வளவு ஆர்வமாக எடுத்துக் கொள்வாள். அவளைப் பொருத்த வரை, ஒவ்வொரு பேட்டியும் குறைந்தபட்சம் ஐந்து புதிய தம்பதிகளை சென்றடைய வேண்டும் என்கிற ஆசை. 

அவள் பேசப்பேச, கௌதம் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். இவ்வளவு தெளிவாக யோசித்து செயல்படும் இவள் நாம கேட்டதுக்கு மட்டும் பிடி கொடுக்க மாட்டேன் என்கிறாளே. கேட்டதும் தப்பாக தோன்றவில்லை. ஆனால், பதிலும் சொல்லாமல், காரணமும் சொல்லாமல் மௌனமாக இருப்பது ஏன் என்று விளங்கவில்லை.

மெல்ல திரும்பி ஜெனிஃபரை பார்த்தான். அவரும், அவனையே பார்த்துக் கொண்டிருந்தார்.

"வழக்கமான சண்டையா?"

ஆம் என்பது போல தலைய ஆட்டினான்.

'ஆனால் இது நாள் வரை இல்லாமல் இன்று மட்டும் ஏன் நம்மை வரச்சொன்னாள் ?'

பேட்டி தொடர்ந்து கொண்டிருந்தது.

“ஏற்கனவே மக்கள் தொகை அதிகமா இருக்கிற நாட்டுல, செயற்கை கருத்தரிப்ப எப்படி சமூக பிரச்சனைக்கான தீர்வாக பாக்கறீங்க?”

“முதல்ல இது எதுவும் செயற்கை முறை இல்லைனு புரிஞ்சுக்கனும். மருத்தவ ரீதியா, தேவைப்பட்டா ஒரு தற்காலிக சூழலை மட்டுமே உருவாக்குறோமே தவிர....குழந்தை எல்லாம் இயற்கையாக வருவது தான். தவிர, அதிகம் மக்கள் தொகை கொண்ட இந்த நாட்டுல தான், குழந்தையிண்மை என்பது ஒரு சமூக பிரச்சனையாக இருக்கு. அதை சரி செய்வதே எங்கள் நோக்கம்"

“பொதுவா உங்க கிட்ட வர்ற பேஷண்டுக்கு எத்தனை நாள்ல குழந்தை பிறக்கும்னு ஏதும் கணக்கு வச்சிருக்கீங்களா?”

“கணக்கு வச்சு வேலை செய்ய அது பொருளும் இல்லை, நான் கடவுளும் இல்லை. ஆனா எங்களோட நடைமுறை படி தொடர்ந்து 11 மாதங்கள் தவறாம எங்க கிட்ட வந்தாங்கனா, கூடுமான வரைகும் குறைகளை நிவர்த்தி செஞ்சு குழந்தை பிறக்கும் சூழலை உருவாக்குவோம்"

“அப்புறம் IVF முறையில டிரை பன்ணுவீங்களா?”

“இல்லை, 11 மாசம் அன்பது அதையும் சேத்து தான்"

"தப்பா நினைக்கலனா ஒரு கேள்வி...ஒரு வேளை, IVF கூட ஒத்துழைக்கலனா என்ன செய்வீங்க"

காயத்திரி தேவியின் சிரிப்பு உறைந்தது. உதட்டை கடித்துக் கொண்டாள். முகம் மாறுகிறது. கோப ரேகைகள் படர்கின்றன. அறைக்குள் ஒரு உடனடி பதற்றம்.

நேஹா டென்ஷன் ஆகி, ‘கட்' என்கிறாள். காயத்திரி பக்கத்தில் இருக்கும் கிளாஸில் இருந்து தண்ணீர் எடுத்துக் குடிக்கிறாள். குனிந்த படியே இருக்கிறாள். இரண்டு கைகளும் ஒன்றை ஒன்று பிசைந்து கொண்டிருந்தன.

“ஸாரி மேடம்....இந்த கேள்வியை விட்டுடலாம். ரொம்ப நல்லா வந்திருக்கு இன்டெர்வியூ. கடைசியில டிஸ்டர்ப் செஞ்சதுக்கு ரொம்ப ஸாரி"

காயத்திரி மெல்ல நிமிர்ந்து பார்த்தாள். டிஷ்யூ பேப்பரால் முகத்தை ஒத்திய படி....

“பரவாயில்லை...கேமிரா ஓடட்டும்...நான் பதில் சொல்றேன்"

“வேண்டாம் மேடம்...நான் தான் அவசர பட்டு தப்பா ஏதோ கேட்டுட்டேன்"

“இல்லை. கேள்வி சரிதான். நான் தான் தேவையில்லாம டென்ஷன் ஆயிட்டேன். பதிலை பதிவு செஞ்சுடறேன். எல்லோருக்கும் தெரியனும். கேமிராவை ஓட விட்டு ப்ரொம்ப்ட் பண்ணுங்க ப்ளீஸ்"

திரும்பி அழுத்தமாக கௌவுதமை பார்த்தாள்.

விளக்குகள் மீண்டும் எரிந்தன. நேஹா ஏற்கனவே கேட்ட கேள்வியை பக்கத்தில் ஒரு நாற்காலியில் அமர்ந்து கேட்கிறாள்.

காயத்திரி நிமிர்ந்து உட்கார்ந்து பேசத் தொடங்குகிறாள். 

“ஒரு வேளை, IVF கூட சரி வரலேன்னா, அடுத்து surragate mother, அதாவது வாடகைத் தாய், மூலம் முயற்சி பண்ணலாம். ஆணின் உயிரணுகளையும், பெண்ணின் கரு முட்டையயும், கருத்தரிக்கும் வாய்ப்புள்ள பெண்ணின் கருப்பையில் வைப்பார்கள். அது நன்றாக வளர்ந்து குழந்தையாக அந்த பெண் பெற்றுக் கொடுப்பார். கருப்பை தான் வேறு பெண்ணைச் சார்ந்ததே ஒழிய, மரபணு ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் அப்படி பிறக்குற குழந்தை, அதனோட உண்மையான பெற்றொரின் வாரிசாகத் தான் இருக்கும். அரசாங்கம் பல கட்டுப்பாடுகளை கொண்டு வந்திருக்கு. ஆனா அது எல்லாம் மக்கள் நலன் சார்ந்து தான் இருக்கு. அதனால அந்த முறையை மக்கள் தேர்ந்தெடுக்கலாம்."

மூச்சை சற்று ஆழமாக இழுத்து விட்டு பின் தொடர்ந்தாள்.

"ஆனால், என்னோட தனிப்பட்ட கருத்து என்னனா, அப்படி வேறு ஒரு பெண்ணை ஒன்பது மாதம் தொந்தரவு செய்து, ஒரு குழந்தையை பெற்றுக் கொள்வதால், என்ன சாதித்து விடப் போகிறோம் ? இது நம்ம குழந்தை அப்படீங்கிற ஈகோ வை திருப்தி படுத்துவதைத் தவிர. கொஞ்சம் யோசித்து பாருங்கள். ஒன்பது மாதம், எல்லா வலிகளையும் தாங்கி ஒரு பெண் ஓரு குழந்தையை பெற்றுக் கொடுத்த பின், அதற்கும் உனக்கும் இனி எந்த தொடர்பும் இல்லை என்று சொன்னால், அந்த பெண்ணிற்கு எப்படி இருக்கும் ? அவள் என்ன மெஷினா? இது போன்ற நிகழ்வுகள் அதிகம் நடப்பது மேல் தட்டுகளில் தான். பல படித்த, தேர்ந்த அறிவாளிகள் - ஏன் சில டாக்டர்கள் கூட யோசிப்பது இல்லை. அதிகமான மக்கள்தொகை கொண்ட நாட்டிலே, குழந்தையிண்மை எப்படி ஒரு சமூக சிக்கலோ, அதைவிட பெரிய சிக்கல், பெற்றோர் ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகள். தங்களால் நேரடியாக குழந்தை பெற்றுக் கொல்ள முடியாது என்கிற நிலைமையில் இருப்பவர்கள், ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து அவர்களது சொந்த குழந்தை போலவே வளர்க்க முன்வர வேண்டும். காலம் செல்ல செல்ல, அறிவியல் நமக்கு புதுவிதமான கதவுகளை திறந்து வைக்கும். ஆனால் மனிதத்தை தாண்டிய எந்த அறிவியல் கண்டு பிடிப்பிற்கும் இங்கு வேலை இல்லை"

மூச்சு விடாமல் பேசி முடித்தாள். முகத்தில் ஒரு தெளிவு பிறந்தது. நெஹாவிடம் திரும்பி - 

"ஒரு வேகத்துல பேசிட்டேன். தேவையில்லாததை நீக்கிடுங்க. வேறு ஏதாச்சும் கேக்கனுமா?"

இல்லை என்பது போல் அவள் தலையசைத்தாள்.

காயத்திரி எழுந்து, ஜெனிஃபரை கூட பார்க்காமல், வெளியே சென்று, நான்காம் மாடியில் உள்ள வீட்டிற்கு சென்றாள். ஜெனிஃபர், கௌதமின் தோளைத் தட்டி, "அவ எதுக்கு என்னை வரச்சொன்னானு புரியுது. இதுக்கு மேல பேச ஏதும் இருக்கானு தெரியலை. பாத்துக்கோங்க" என்று சொல்லிவிட்டு, அறையை விட்டு வெளியே சென்றார்.

சிறிது நேரம் என்ன செய்வதென்று தெரியாமல் நின்ற கௌதம், அறையை விட்டு வெளியே வந்தான்.

இத்தனை நாள் நாம் எவ்வளவு தொந்தரவு செய்தும் பிடி கொடுக்காமல் இருந்தவள், இன்றைக்கு பொட்டில் அறைந்தது போல பதில் சொல்லிவிட்டாள். 

மனதுக்குள் அவள் இன்னும் இரண்டு அடி உயர்ந்து விட்டாள். இனி எட்டிப் பிடிப்பது என்பது நடக்காத காரியம்.

மெதுவாக படிக்கட்டுகளில் ஏறத் தொடங்கினான்.

No comments:

Post a Comment

நிம்மதியை தேடும் நினைவுகள்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் வதந்தி படத்தின் முழு பக்க விளம்பரத்தை  ஹிந்து நாளிதழில் பார்த்த போது தோன்றியது.. அதன் பங்களிப்பவரில் ஒருவரான மீரா...