எஸ்.என் மாடியில், மேகநாதனை பார்த்தேன். ஈஸ்வரி ஸ்டொர்ஸில் காபி பொடி அரைத்துக் கொண்டிருந்தவன். TASMAC சப்ளையராக அவனைப் பார்த்தது ஆச்சரியமாக இருந்தது.
சிரித்தபடி என்னை நொக்கி வந்தவன், "சம்பளம் பத்தல ஸார். அதான் தனியா ஏதாச்சும் செய்யலாம்னு வெளிய வந்துட்டேன். அது வரைக்கும் இங்கு வேலை. வெள்ளி, சனி மட்டும் முழுநாள், மற்ற நாளெல்லாம் பகல் மட்டும் தான்"
அவன் ஒற்றை ஆளாக பொடி அரைத்து, கவரில் நிரப்பி எல்லோருக்கும் கொடுக்கும் லாவகம் ரசிக்கும் படி இருக்கும். வருபவர் யார் என்று தலை நிமிர்ந்து பார்க்காமல் வேலையிலேயே குறியாக இருப்பவன், என்னை கவனித்திருக்கிறான். இத்தனைக்கும் மாதம் ஒரு முறை தான் போவேன்.
"அண்ணாச்சி ஒன்னும் சொல்லலியா?"
"அவரு போக வேணாம்னு தான் சொன்னாரு. ஆனா, வேற வேலை குடுக்கல. மளிகைய பாத்துக்க வேற ஆள போட்டுட்டாரு. கே.கே நகர்ல கூட மளிகை கடை தான். காபி பவுடர் மாம்பலத்துல மட்டும் தான். கட்டுபடி ஆகல ஸார். அதான்"
"என்ன செய்ய போற?"
"தண்ணி கேன் போடலாம்னு இருக்கேன் ஸார். அண்ணாச்சி கிட்ட சொல்லிட்டேன். அங்க வர்ற கஸ்டமர்களும் வாங்கிக்கிறேனு சொல்றாங்க. வண்டிக்கு பாங்குல லோன் போட்டிருக்கேன். ஒரு மாசம் ஆகும். வந்ததும் ஆரம்பிக்க வேண்டியது தான்."
"கேன், தண்ணிக்கு என்ன பண்ணப் போற?"
"சைதாபேட்டையில் ஃப்ரெண்டு பண்றான் ஸார், அவன் கிட்ட இருந்து தான் வாங்கப் போறேன்"
"நீ ஒன்னு பண்ணு, இந்த நம்பர்க்கு ஃபோன் பண்ணி, ராஜன் ஒருத்தர் கிட்ட பேசு. இந்த ஏரியா முழுக்க தண்ணி அவரு தான் ஹோல்சேல் சப்ளை. நான் சொன்னேன்னு சொல்லு. கேன் கூட அவரு ஏற்பாடு பன்ணுவார், உன் கம்பெனி பேரோட. ஆரம்பிச்ச உடனே சொல்லு, நான் வாங்கிக்கிறேன். எங்க அபார்ட்மெண்டுல அறுவது வீடு இருக்கு. எப்படியும் ஒரு இருவது பேரையாவது வாங்க வச்சிடலாம்."
நம்பரை கொடுத்துவிட்டு வந்தேன்.
ஒவ்வொரு வாரக்கடைசியிலும் வேலை எங்க இருந்தாலும் எஸ்.என் போவதை வழக்கமாக வைத்துக் கொண்டேன். மேகநாதனும் நடப்பதை அவ்வப்போது சொல்லிக் கொண்டிருந்தான். வாரக் கடைசியாக இருந்ததால் சரியாக பேச முடியவில்லை.
கவிதா ஊரில் இல்லாத ஒரு நாள் பகலில் சென்றேன்.
மேகநாதன் சோகத்துடன் ஓரமாக உட்கார்ந்திருந்தான். ரெண்டு பாட்டில் பீர் கொண்டு வந்து கொடுத்தவனை அருகில் அழைத்து உட்கார வைத்து, பேச்சு கொடுத்தேன்.
"ஏன் டல்லா இருக்கே? லோன் என்ன ஆச்சு?"
"அது அடுத்த வாரம் வந்துடும் ஸார். வண்டியும் எடுத்துடுவேன். ஆனா இப்ப பயமா இருக்கு"
"ஏன்"
"ஈஸ்வரி கஸ்டமர்லாம் பிடி குடுக்காம பேசறாங்க. முதல்ல சரின்னு சொன்னவங்க இப்ப பின் வாங்குறாங்க. சாராய கடைல வேலை செய்றவன எப்படி நம்பி வீட்டுகுள்ள விடறதுனு அவங்க பேசிக்கிறது என் காதுலேயே விழுது"
"அண்ணாச்சி ஏதாச்சும் சொல்லிட்டாரா?"
"இல்ல ஸார். அவரு தங்கமானவரு. அவரு தான் இங்க வேலை செய்யறத யார் கிட்டயும் சொல்லாதே அப்படினு சொன்னாரு"
"சரி விடு. ராஜன போய் பாத்தியா?"
"பாத்தேன் ஸார். நிறைய உதவி செஞ்சாரு. ஆனா காசு விஷயத்துல கரெக்டா இருக்காரு. அதான் பயமா இருக்கு. அவ்வளவு முதல் போட்டு, கஸ்டமர் கிடைக்கலனா எப்படி?"
அவனைப் பார்க்க எனக்கு பாவமாக இருந்தது.
"அதெல்லாம் வொரி பண்ணிக்காதே. ஒருத்தன் நல்லா ஆனா ஜனங்களுக்கு பிடிக்காது. நீ எங்க அபார்ட்மெண்டுல ஆரம்பி. நானும் என் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட சொல்றேன்."
"தாங்க்ஸ் ஸார்"
"சாயந்திரம் வந்து வீட்டுக்கு கூட்டிட்டு போறேன். ஒயிஃப் வீட்டுல இல்ல. நீ அங்க வந்து வீட்டையும் பாரு, முடிஞ்சா நாலஞ்சு பேர அறிமுகப் படுத்தறேன். காலையில வழக்கம் போல வேலைக்கு போயிடு.
`சே...என்ன சமூகம் இது? டாஸ்மாக்ல வேலை செய்யறது ஒரு குத்தமா? இத்தனைக்கும் மேகநாதனுக்கு எந்த பழக்கமும் இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும். வர்றவங்க பாதி பேரு ஏரியா விட்டு ஏரியா போயி குடிக்கிறது தெரியாதா என்ன? எப்படியும் கண்டிப்பா வாங்குற தண்ணி கேனை இவன் கிட்ட வாங்கினா தான் என்ன?' என எண்ணிய படியே வீட்டுக்கு வந்தேன்.
போதையுடன் சேர்ந்து கோபமும் தலைக்கு ஏறியது. குளித்து விட்டு, கணேஷ் கடையில வாங்குன தக்காளி சாதத்தை சாப்பிட்டு விட்டு படுத்தேன். மாலையில் எழுந்து, பார்க்கை பத்து முறை நடந்து விட்டு, வீட்டிற்கு வந்து, மேகநாதனுக்கு ஃபோன் செய்தேன். அரை மணி நேரத்தில், விஸ்கியும் ஸ்நாக்ஸுமாக வந்தான். அவற்றை வீட்டில் வைத்து விட்டு அர்ஜுன் வீட்டிற்கு சென்று மணி அடித்தேன். அவர் மனைவி திறந்தார்.
"பையன் எனக்குத் தெரிஞ்சவன். புதுசா தண்ணி கேன் போடப் போறான். நீங்களும் வாங்குங்களேன்"
"எவ்வளவு தம்பி ஒரு கேன்?"
மேகநாதன் சந்தோஷமாக விலையை சொன்னான். அவனது விஸிடிங் கார்டை கொடுத்து விட்டு, எப்போது வேண்டுமானாலும் ஃபோன் செய்யலாம் என்றான். இன்னும் ஐந்தாறு வீடுகளுக்கு கூட்டிச் சென்றேன். எல்லா இடத்திலும் சாதகமான பதில். என் செல்வாக்கைக் கண்டு எனக்கே மலைப்பாக இருந்தது. அதே மூடில், வீட்டிற்கு வந்து, விஸ்கியை திறந்தேன். மேகநாதன் பொறுப்பாக எல்லாவற்றையும் பிரித்து வைத்தான். ராஜா பாட்டை சத்தமாக வைத்து விட்டு, நான் ஏக குஷியோடு பொழுதைப் போக்கினேன். எல்லாவற்றிலும் ஒரு கண்ணை வைத்த படி, மேகநாதனும் கூடவே பாடினான். இரவு கணேஷ் கடைக்குச் சென்று இருவருக்கும் புரொட்டா வாங்கி வந்தான். எப்போது உறங்கினேன் என்று தெரியாது. மேகநாதன் தான் உலுக்கி எழுப்பினான்.
"ஸார், நான் கிளம்பறேன்"
"இருப்பா, நான் டிராப் பண்றேன்"
"பரவாயில்லை ஸார், நான் போயிக்கிறேன். மணி நாலரை தான் ஆகுது. நீங்க இன்னும் கொஞ்ச நேரம் தூங்குங்க"
சொல்லிவிட்டு அவன் சென்று விட்டான்.
அந்த வாரம் வெள்ளிக்கிழமை எஸ்.என் னுக்கு போன போது, மேகநாதனைக் காணவில்லை. வேலையில் இருந்து நின்று விட்டான் என்றார்கள். அவனது மொபைல் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. விஸிடிங்க் கார்டை வாங்காமல் விட்டது தப்போ என பட்டது. ராஜனுக்கு ஃபோன் செய்து மேகநாதனைப் பற்றி விசாரித்தேன். அவன் மறு நாளிலிருந்து தண்ணீர் எடுத்துக் கொள்வதாக சொன்னான். அவனிடம் மேகநாதனின் நம்பரை கேட்க கூச்சமாக இருந்தது, அதனால் கேட்கவில்லை. எப்படியோ, அவன் நல்லா இருந்தா சரி. கேன் எடுக்க ஆரம்பிச்சதும் கூப்பிடுவான்னு நம்பிக்கை இருந்தது.
ஆனால், பத்து நாட்களாக அவன் கூப்பிடவில்லை. நடுவில் இரண்டு முறை வீட்டில் கேன் மாற்றி விட்டார்கள். `ஒரு வேளை பிஸி ஆயிட்டானோ`
இப்படியே ரெண்டு மாதம் ஓடி விட்டது. ஒரு நாள் `வரும் போது காபி பொடி வாங்கி வாங்க' என்று கவிதா சொன்னாள்.
மாலை ஈஸ்வரி ஸ்டோருக்கு சென்றேன். வாசலில் நிறைய தண்ணீர் கேன் அடுக்கி வைக்கப் பட்டிருந்தது. அருகே ஒரு மோட்டார் வண்டி. அதில் கேன்களை இறக்குவதும் ஏற்றுவதுமாக இரண்டு பேர் பிஸியாக இருந்தார்கள். `சே. எவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகம் அண்ணாச்சி செய்வது? தன்னிடம் வேலை செய்த ஒருவன் நன்றாக இருப்பது பிடிக்காமல், போட்டியாக தொழில் ஆரம்பித்து விட்டாரே. காசு அவ்வளவு முக்கியமோ? விளங்குவார்களா, இவர்கள் எல்லாம்'.
அதீத கோபத்துடன் கல்லாவில் இருந்த அண்ணாச்சியிடம் சென்று காசு கொடுத்து காபி பொடிக்கு சீட்டு வாங்கினேன். அவர் என்னை ஒரு முறை ஏற இறங்கப் பார்த்து விட்டு சீட்டை நீட்டினார். வெடுக்கென்று அதனைப் பிடுங்கி, பொடி அரைக்கும் இடத்துக்கு வந்தேன். அங்கே அமைதியாக மேகநாதன் பொடி அரைத்துக் கொண்டிருந்தான். தலைச சுற்றியது எனக்கு.
அவனது வழமை போலவே, வந்தவர் யார் என்று பார்க்காமல், பொடியை அரைத்துக் கொண்டிருந்தான். எனக்கு ஒன்றும் புரியவில்லை. `இவன் ஏன் திரும்ப இங்க ?`
டின்னிலிருந்து பொடியை காகித கவருக்குள் கொட்டியபடியே மேகநாதன் சொன்னான் -
"எவ்வளவு சொல்லியும் கேக்காம, அன்னிக்கி நைட்டு விடாம உங்க ஒயிஃப் கிட்ட ஃபோன் பண்ணி பேசினீங்களே. இப்ப என்ன ஆச்சு பாத்தீங்களா? நெஜமாவே உங்க அபார்ட்மெண்டுல இருந்தவங்க கிட்ட பேசின போது பெரிய நம்பிக்கை வந்துச்சு. தொழில்ல சாதிக்கலாம்னு. எல்லாம் போச்சு. என்ன இருந்தாலும் சாராய கடை வேலைக்கு அவ்வளவு தான் மரியாதை"
`ஃபோன் பண்ணோமா? பண்ணி என்ன பேசுனோம் ?'
சுத்தமாக நினைவில் இல்லை. ஆனால் வழக்கம் போல நன்றாக குடித்து விட்டு கவிதாவிடம் ஏதோ உளறி, தாழியை உடைத்தது மட்டும் உண்மை என புரிந்தது.
"வாசல்ல இருக்குற கேன் எல்லாம்?"
"எல்லாம் என் பெருல நடக்குறது தான். அண்ணாச்சி அவரோட வியாபாரமா பண்றாரு. நீ வழக்கம் போல பொடிய அரைடா. பழைய சம்பளம் வாங்கிக்கோ. தண்ணி கேன்ல வர்ற எல்லா லாபத்தையும் உனக்கே குடுத்துடுறேன். இனிமே கிறுக்குத் தனமா ஏதும் செய்யாதே" அப்படினு சொல்லிட்டார்.
நான், கை நடுங்க பொடி கவரை எடுத்து பையினில் திணித்து, திரும்பி பார்க்காமல் வேகமாக நகர்ந்தேன்.

No comments:
Post a Comment