ஆனால் ஒரு சில வெற்றிகள், தேர்தல் போட்டியையே தோற்கடிப்பதைக் கண்டு, எந்த காலத்தில் வாழ்கிறோம் என்கிற அய்யம் எட்டிப் பார்க்கிறது.
அரசியல்வாதிகள் பெரும்பாலோனோர் மீது குற்றச்சாட்டுகள் எழுவதும், சிலர் அதற்கு தண்டனை பெறுவதும், பலர் தப்பிப்பதும் இந்திய சூழலில் இயற்கையே. அதற்குள் செல்வது தேவையற்ற ஒன்று.
ஆனால் சில குற்றச்சாட்டுகளையும், அதன் தரவுகளையும் எதிர்நோக்கும் போது, அது அரசியல் அடிப்படையில் இல்லாமல் மனிதநேயத்தின் வழி பார்க்கும் பொதுச் சமூகத்தின் ஆன்மாவை சிதேனும் அசைத்துப் பார்க்கும், பார்க்க வேண்டும்.
அதனையும் மீறி, பொள்ளாச்சி ஜெயராமன், சுமார் எண்பதாயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார் என்கிற செய்தியை - இதுவும் கடந்து போகும் - என்று எளிமையாக புறந்தள்ள முடியவில்லை. அவ்வளவு வலிமையானதா சாதீய சார்பும், பணமும் ?
எப்போதும் சட்டத்தின் மீது பழியைப் போட்டு, தார்மீகம் என்பதை வசதிக்கு ஏற்றாற் போல வளைத்துக் கொள்ளும் போக்கு நாகரிக உலகில் ஏற்புடையது அல்ல. இது சரியென்றால், எங்கோ கண்காணா இடத்தில் யாரென்றே தெரியாத யுவதிகள் இது போன்ற கொடுமைகளை அனுபவிக்கும் போது, கேள்வி கேட்க வக்கற்றவர்களாகி விடுவோம்.
சட்ட போரட்டங்களை தாண்டி சமூக போராட்டம் என்பது மிக தேவையான ஒன்று என்று உரத்துக் குரல் கொடுக்கும் நாள் இன்று. அந்தக் குரல், அந்த எண்பதாயிரம் வாக்காளர்களில் இருக்கும் பெண்களுக்கும், பெண்களை உறவுகளாகவும், நல்ல நட்பாகவும் பார்க்கும் ஆண்களுக்கும் செவிட்டில் அறைவது போல கேட்க வேண்டும்.
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்றார், அண்ணா!
அந்த மகேசன் தீர்ப்பையே கேள்வி கேட்டதாக நம்பும் மக்கள் உள்ள மண் இது.
அந்த நம்பிக்கை பொய்த்து விடக்கூடாது.

No comments:
Post a Comment