தன் நிலை எப்படி இருந்தாலும், தனது உழைப்பால், தனது பணியிடமும், முதல் போட்டவர்களின் வளங்கொழிக்கவும் வழி வகை செய்யும், உழைப்பாளிகளை நினைவு கூறும் தினம் இன்று. தடை இல்லா உலக இயக்கத்தின் வேராக விளங்கும் தன்னலம் அறியாதவர்கள்.
இன்றைய காலத் தேவையில், அவர்களின் ஒரு வடிவமாக விளங்குகிற மருத்துவர்களுக்கும், முன் களப்பணியாளர்களுக்கும், முக்கியமாக, துப்புரவு தோழர்களுக்கும், சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
வரலாறு பல விசித்திரங்களைக் கொண்டது. முதலாளித்துவம் மேலோங்கி நிற்கும் எந்த அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து இன்று பேசுகிறோமோ, அந்த அமெரிக்காவே, உழைப்பாளர் தினம் பிறப்பதற்கு காரணியாக செயல்பட்டது என்பது, அந்த விசித்திரங்களுக்குள் ஒன்று.
பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியிலும், பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வேகமாக வளர்ந்த நாடுகளில் தொழிலாளர்கள் பலரும் நாளொன்றுக்கு பன்னிரெண்டு முதல் பதினெட்டு மணி நேரக் கட்டாய வேலை செய்ய அழுந்தப்பட்டதும், அதேச சமயம் அதற்கான எதிர்கருத்துகளும், போராட்டங்களுக்கும் ஆங்காங்கே வெடித்துக் கிளம்பியதும்
நடைபெற்றது. இங்லிலாந்து, பிரான்ஸ், ருஷியா, அமெரிக்கா, ஆஸ்திரேலிய நாடுகளில் வெகமாக பரவிய போராட்டங்கள், கார்ல் மார்க்ஸ் கூறிய 'அதிகப்படியாக ஒரு நாளைக்கு எட்டு மணி நேர பணி' என்பதை மய்யமாக வைத்து இயங்கின.
முதன் முதலில் ஆஸ்திரேலியாவில் கட்டிட தொழிலாளர்கள் கண்ட எட்டு மணி நேர போரட்டத்தின் வெற்றி, வர்க்க போராட்டத்தின் மைல் கல்லாகப் பார்க்கப்பட்டு, மற்ற போராட்டங்களுக்கு ஒரு வேகத்தைக் கொடுக்க, மற்ற இயக்கங்களின் தொடர் வேலை நிறுத்தம் காரணமாக உருவான அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு, போராட்டங்களின் வீரியத்தை கூட்டியது. 1886ம் ஆண்டு, அந்த கூட்டமைப்பு எட்டு மணி நேர பணியை அடிப்படை கோரிக்கையாக வைத்து நாடு தழுவிய வேலை நிறுத்ததில் ஈடுபட்டது.
ஆயிரத்திற்கும் மேலான நிறுவனங்களின் தொழிலாளர்கள் பங்கெடுத்த போராட்டத்தினால் அமெரிக்க பெரு நிறுவனங்கள் மூடப்பட்டன. இரயில் போக்குவரத்து நின்றது. வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற தொழிலாளர் ஊர்வலங்கள் அமெரிக்காவை உலுக்கியது.
1886-ம் ஆண்டு மே மாதம் 1-ம் தேதியன்று சிகாகோ நகரில் தொழிலாளர்களின் முக்கிய கோரிக்கையான எட்டு நேர பணியை முன்னிருத்தி நடத்தப் பட்ட அமைதியான போராட்டம், இன்றைய ஜல்லிக் கட்டு போராட்டம் போல போலீஸ் வன்முறையில் முடிந்தது. தொழிலாளர்கள் பலர் உயிரிழக்க, தொடர்ச்சியாக, தொழிலாளர் தலைவர்கள் ஆகஸ்ட் ஸ்பைஸ் (August Spies), ஆல்பேர்ட் பார்சன்ஸ் (Alber Parsons), அடொல்ஃப் ஃபிஷர் (Adolph Fischer), ஜோர்ஜ் ஏங்கல் (George Engel) ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். அமெரிக்கா முழுதும் கறுப்பு தினமாக அறிவிக்கப்பட்ட, அவர்களின் இறுதி ஊர்வல நாளில், அமெரிக்க தேசமே அணி திரண்டது.
மூன்று வருடம் கழித்து, பாரிசில் கூடிய சோசலிசத் தொழிலாளர்களின் சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம், எட்டு மணி நேர போராட்டத்தை முன்னெடுத்து செல்வது என்றும் சிக்காகோ சதியை இம்மாநாடு கடுமையாக கண்டித்ததோடு மே 1 அனைத்துலக அளவில் தொழிலாளர் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்ற அறைக்கூவல் விடுத்தது.
அமெரிக்க மற்றும் பல்வேறு நாடுகளில் தொழிலாளர்களின் 8 மணி நேர வேலைக்கான போராட்டமும், சிகாகோ தியாகிகளின் தியாகமும்தான் இன்றைக்கு மே 1 – உழைப்பாளர் தினமாக நம்முன் நிற்கிறது.
தொழிலாளர்கள் உரிமையை இப்படி போராடி வென்ற அமெரிக்கா பின்னாளில், முதலாளித்துவத்திற்கு மண்டியிட்டதும், காலத்திற்கேற்ற மாற்றம் கொல்ளாமல் ஓரிடத்திலேயே தங்கிவிட்ட பொதுவுடைமை தத்துவமும், வரலாற்று விசித்திரத்தின் வேறு சில பக்கங்கள்
இந்தியாவில் எல்லா முற்போக்கு சிந்தனை மற்றும் செயல்களுக்கு முன்னோடியான தமிழகமே, தோழர் சிங்காரவேலர் தலைமயில், 1923ஆம் ஆண்டு அனனுசரித்து புதிய பாதை காட்டியது. இதே போல வேறு சில கதவுகளும் திறக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை.
உலக உழைப்பாளர் தின வாழ்த்துகள்!!!