ஆனால் ஏதோ இடற...அவரை எனக்கு அறிமுகம் செய்தவனைப் பற்றி எழுத முடிவு செய்தேன்.
சரியாக ஒன்பது வருடம் இதே நாளில்...(13/12/2013) பல நேரங்களில் என் இடுக்கன் கலைந்த நண்பன் C R குமார் காலத்தே கரைந்தான்.
என்று முதலில் பார்த்தோம்...? எப்படி பழகினோம்..? என்று இருவருக்குமே நினைவில் இல்லை... ஆனால் அன்றைய தினம் பின்னிரவில் அவன் பேச்சு மூச்சற்று விழுந்திருக்கிறான் என அலை பேசியில் வந்த தகவல் எனை புரட்டிப் போட்டது.
அவசரமாக கிளம்பி சூர்யா மருத்துவமணை சென்று பார்த்த போது...அவன் ஒரு காரின் பின்னிருக்கையில் உட்கார்ந்த நிலையில் கிடத்தி வைக்கப் பட்டிருந்தான்.
என் உடன் வந்த நண்பர் மருத்தவரிடம் சென்று நாம் திரைப்படங்களில் காணும் சில யுக்திகளை செய்து பாருகங்களேன் என கெஞ்சுகிறார்...எப்படியாவது மீண்டும் உயிர்பெற்று விடமாட்டானா என்ற பதபதைப்புடன்.
அவன் ஆளுமை அப்படி... (இல்லாவிட்டால் அன்று பணியில் இருந்த இரண்டு மின்சார வாரிய பொறியாளர்கள் - அப்போது தமிழ் நாடு மின்சார வாரியத்திற்கு ஒரு மென்பொருள் செய்ய ஒப்பந்தம் செய்திருந்தோம். அந்த வகையில் அவர்கள் எங்கள் வாடிக்கையாளர் அவ்வளவே - சொந்த செலவில் கார் வைத்துக்கொண்டு அரூர் வரை பயணம் செய்து இறுதி மரியாதை செலுத்தியிருப்பார்களா?)
காரில் சடலமாக இருந்த நண்பனிடம் "இப்படி நட்டாற்றில் விட்டு சென்று விட்டாயே, இனி நான் என்ன செய்வேன்?" என அரற்றினேன்.
பதிமூன்று வருடங்களாக என்னுடன் தொழில் முறையாய் பயணித்து பல சுக துக்கங்களில் தோளோடு தோள் நின்றவன் இப்போது இல்லை என்று ஆகிப் போனதும் நூலறுந்த பட்டமாக சில நாட்கள் திரிந்தேன். பேச்சு வழக்கில் "நடைபிணம்" என்பார்கள்.
நான்கு நாட்கள் கழித்து ஒரு மாலை வேளையில் அவனது வகுப்புத் தோழன் டோக்யோவில் இருந்து தொடர்பு கொண்டு "நாலு நாள் எனக்கு எதுவும் ஓடலை...நீ எப்படி இருக்க?" என்று கேட்டதும் தான் மீண்டும் யதார்த்ததிற்கு வந்தேன்.
அவன் நினைவை நிலைத்து வைக்க வேண்டும் என முடிவோடு பலவற்றை முன்னெடுத்தேன்...எல்லாம் தோல்வி.
ஒன்பது வருடம் கழிந்த நிலையில் இப்போது தான் உணர்கிறேன்...அவன் எனக்கு எவ்வளவு பெரிய அரணாக இருந்திருக்கிறான் என்று.
"அவன் இருந்தா இப்படி எல்லாம் நடந்திருக்குமா?" என்பது என்னை பொறுத்தவரையில் வெறும் வசனம் இல்லை... உண்மை. கடந்த சில காலமாக நான் சந்தித்த பல அவலங்களை அவன் கண்டிப்பாக தடுத்திருப்பான் என்பது உறுதி.
இந்நாளில் மீண்டும் ஒரு முறை எண்ணிப் பார்க்கிறேன் நண்பா...
நிம்மதியாக நீ...
நினைவுகளுடன் நான்...
பிகு : தோழர் மீரான் மைதீன் அவர்களை எனக்கு அறிமுகப்படுத்தியது என் நண்பன் தான். அவரைப்பற்றி நான் எழுத நினைத்ததும், எங்கள் மூவரையும் இணைத்த ஒரு மிகப்பெரிய ஆளுமையைப் பற்றியும், பிரிதொரு தருணத்தில்.