பின்னிரவில் வாசல் கதவு ஒன்றோடு ஓன்று மோதும் சத்தம் கேட்டு அருண் விழித்துக் கொண்டான். டார்ச் வெளிச்சத்தில் சென்று பார்க்கையில், வீட்டுக்குள் தண்ணீர் அதிக அளவு புகுந்திருப்பது தெரிந்தது. மேல் ஜன்னலின் கதவை திறந்து பார்த்தான். இரண்டு மணி நேரத்தில் தண்ணீர் அளவு கூடியிருந்தது . தோள் வழியே எட்டிப் பார்த்த மாதவியின் கண்களில் மிரட்சி தெரிந்தது.
"எனக்கு பயமா இருக்கு" என்றாள். அவளை அணைத்து ஆறுதல் சொல்லிய அருண், வேக வேகமாக முக்கிய காகிதங்களை பிளாஸ்டிக் பையினுள் போட்டு, பரண் மீது வீசினான்.
மாதவியிடம் திரும்பி, "கவலைப்படாதே, எப்ப வேணா போட் வரும். பத்திரமா ஒரு இடத்துக்கு போயிடலாம். தண்ணி வடிஞ்சதும் திரும்பி வரலாம்" என்றான்.
"வந்து வேற இடத்துக்கு போயிடலாங்க. ரொம்ப பயமா இருக்கு" என்றாள்.
அவள் தலையைக் கோதியபடியே ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருந்தான்.
விடிகாலை நான்கைந்து படகுகள் வந்தன. முதலில் குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் பெண்களை ஏற்றிக் கொண்டு போனார்கள். தயங்கிய மாதவிக்கு அருண் சமாதானம் சொன்னான்.
"நீ முதல்ல போயிடு நான் அப்புறம் வர்றேன். எல்லாம் கவரன்மெண்ட் போட் தான். தைரியமா போ" என்றான்.
அவள் சென்றதும் மாடிக்கு சென்று சுற்றிப் பார்த்தான். எல்லா ஏரிகளையும் திறந்து விட்டிருப்பார்கள் போல. அந்த இடமே வெள்ளக் காடாக மாறியிருந்தது. எந்த வீட்டின் கீழ் தளமும் தெரியவில்லை. எங்கும் தண்ணீர்.
'மாதவி சொன்னது சரி, எல்லாம் சரியானதும் வேறு இடம் போக வேண்டும். நாம் தான் அவளுக்கு இனி வாழ்க்கை முழுதும்' என எண்ணிக் கோண்டான்.
அப்போது அவன் அறிந்திருக்கவில்லை, காலம் அவனோடு கண்ணாமூச்சி ஆடும் என்று.
*****
"பேச்சியம்மா எங்கே?"
வீட்டுக்குள் நுழைந்து தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்ட ஹேமா இப்படி கேட்டதும், மற்றவர் அதிர்ச்சியாகினர்.
"உங்க ரெண்டு பேரையும் தானே ஒன்னா கூட்டி போனாங்க? உனக்கு தெரியாதா ?"
ஹேமா இதை எதிர்பார்க்கவில்லை.
சற்று நேரம் யாருக்கும் எதுவும் விளங்கவும் இல்லை. மின்விசிறி சத்தமும், கடிகாரத்தில் முள் நகரும் டிக் டிக் சத்தமும் இப்போது சற்று பெரிதாக கேட்டது. ஹேமாவின் கை நடுங்கி டம்ளரில் இருந்த தண்ணீர் தளும்பியது. கண்ணாடியை அணிந்தபடி, சரஸ்வதி ஹாலுக்குள் நுழைந்தாள்.
"என்ன ஆச்சு?"
"ஸ்டான்லியில கேட்டதுக்கு, ஒரு வாரம் முன்னாடியே டிஸ்சார்ஜ் ஆயிட்டானு சொன்னாங்களே, இங்க வரலியா?" சரஸ்வதியை கவனிக்காமல் சரவணனிடம் கேட்டாள் ஹேமா.
எல்லோர் முகத்திலும் கலவரம். சட்டென்று நிலைமையை புரிந்து கொண்ட சரஸ்வதி, "என்னம்மா, உனக்கு தான் விஷயம் தெரியுமே. ஆஸ்பத்திரியில சொல்லியிருக்க கூடாதா? ஆமாம், நீ இத்தனை நாள் அவ கூட இல்லியா? "
தரையைப் பார்த்தபடி ஹேமா சில வினாடிகள் மௌனமாக இருந்தாள்.
"இல்லமா, ஆஸ்பத்திரியில டெஸ்ட் பண்ணிட்டு எனக்கு மோசமா இல்லைனு சொல்லி என்னை விடுதிக்கு அனுப்பிட்டாங்க. பேச்சிய அட்மிஷன் போட கூட்டிகிட்டு போனாங்க. நான் நர்ஸ் கிட்டபேச்சிய பத்தி எல்லாம் சொல்லி பாத்துக்குங்க அப்படினு சொல்லிட்டு தான் போனேன். நடுவுல நீங்க யாருமே போயி பாக்கலியா ?" - சரவணனைப் பார்த்துக் கேட்டாள்.
சரவணனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவன் பங்குக்கு ஹோம் குவரண்டைன் முடிந்ததும் ரெண்டு முறை போய் பார்த்தான். ஹேமா விடுதிக்கு அனுப்பப்பட்ட தகவல் கிடைத்தும், எந்த விடுதி என்று சரியாக தெரியாததால், அவளே வந்துவிடுவாள் என்று வீட்டுக்கு வந்துவிட்டான். இருவரும் வேறு வேறு இடத்தில் இருப்பார்கள் எனறு கற்பனை கூட செய்யவில்லை. அசதியில் திரும்பச் சென்று தேடவில்லை. இப்போது என்னவென்றால், பேச்சியைக் காணவில்லை.
பதற்றம் எல்லோரையும் சூழ்ந்தது. ஹேமாவின் கண்ணின் ஓரம் கண்ணீர் துளிகள் மெல்ல பெரிதாகி.. ஓ வென்று அழத் தொடங்ககினாள் . சரவணன் வந்து அவள் தோளை ஆதரவாக பிடித்து,
"கவலைப்படாதே.. கண்டிப்பா கண்டுபிடிச்சிடலாம்" என்றான். ஹேமாவின் அழுகையோ நின்றபாடில்லை.
மறு நாள் காலை எட்டு மணிக்கே சரவணன் ஆஸ்பத்திரிக்கு கிளம்பினான். கூடவே வருவதாகச் சொன்ன ஹேமாவை தடுத்து விட்டான்.
*****
நேரம் ஆகிக் கொண்டிருந்ததே ஒழிய வேறு படகு ஏதும் வரவில்லை. பதற்றத்தில் எந்த முகாம் என்றும் கேட்டுக் கொள்ளவில்லை. அருணுக்கு வியர்த்தது.
`தனியாக அனுப்பியது தவறோ? எங்கு போய் தேடுவது இப்போது ? யாரிடம் கேட்பது ?'
தண்ணீர் சற்று வடிய தொடங்கி இருந்ததால், அவனே வீட்டில் இருந்து கிளம்பினான். முழங்காலுக்கு கீழ் அளவு தண்ணீரில் சாலையின் நடுவே மெதுவாக நடந்தான். எங்கும் ஆள் அரவமே இல்லை. தண்ணீர் ஓடும் சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. அந்த சத்தம் சற்று திகிலை கூட்டியது. வெளியே வந்து பிரதான சாலையில் இடது புறம் திரும்பி, தாம்பரம் பேருந்து நிலையம் நோக்கி நடந்தான். சில ஆட்களின் நடமாட்டம் சற்று நிம்மதி தந்தது. உணவுப் பொருட்களைக் கொண்டு வந்தவர்கள் எங்கு எப்படி அதனை விநியோகம் செய்யலாம் என்று பேசிக் கொண்டிருந்தார்கள்.
நேரே அவர்களிடம் சென்று, "ஸார், இங்க ரிலீஃப் கேம்ப் எங்க போட்டிருக்காங்க?" என்றான்.
"பக்கத்தில இல்லியே ஸார். மூனு கேம்ப் சேலையூர் கிட்ட போட்டிருக்காங்க, அதுவும் ரொம்பிடுச்சுன்னு சிலர் சதானந்தபுரத்துக்கும், குரொம்பேட்டைக்கும் மாத்திருக்காங்க. எப்ப வந்து கூட்டிகிட்டு போனாங்க?"
"விடிகாலை ஸார்"
"அப்ப நிச்சயம் சேலையூர் கெடையாது ஸார். மத்த ரெண்டு இடங்கள் தான் பாக்கணும்" சொல்லிவிட்டு அவர்கள் வேலையில் மூழ்கினார்கள். அருண் செய்வதறியாது திரும்பி மெதுவாக நடந்து வீடு வந்து சேர்ந்தான்.
`வெளி உலகம் தெரியாதுடா அவளுக்கு. பத்திரமா பாத்துக்க' என்று பரஞ்சோதி ஸார் திரும்ப திரும்ப சொன்னது நினைவுக்கு வந்தது. அழுகை முட்டியது.
மாதவியின் உண்மை பெயர் என்னவென்று தெரியாது. ஈழத்தில் போர் உக்கிரமான போது, பதின் வயதில் அகதியாக வந்தாள். தீவிர ஈழ ஆதரவாளரான அருணின் வாத்தியார் பரஞ்சோதி தான், மிகவும் சிரமப் பட்டு அவளை முகாமிலிருந்து விடுவித்து, தன் சொந்த ஊரான அம்பையில் வளர்த்து வந்தார். போராளிகள் குடும்பத்தைச் சேர்ந்த அவளுக்கு மறு வாழ்வு ஏற்படுத்திக் கொடுப்பது தனது கடமை என்று நினைத்தார். ஒவ்வொரு முறை அருண் அவரைப் பார்க்க அம்பைக்கு செல்லும் போது, மாதவியைப் பார்ப்பான். முதலில் முகம் நிறைய சோகம் கொண்டிருந்தவள், சுற்றத்தாரின் அன்பைக் கண்டு மெல்ல இயல்பானாள். அவளின் சடங்கைக் கூட ஊரே திருவிழா போல் கொண்டாடியது. பரஞ்சோதியின் மேல் அப்படி ஒரு மரியாதை. பின் தனது பழைய வாழ்க்கையை முழுவதுமாக மறந்து, துள்ளித் திரிய தொடங்கினாள். அவளது சேட்டைகள் அருணை வெகுவாக கவர்ந்தன.
வேலை நிமித்தம் அமெரிக்கா செல்லும் வாய்ப்பு வந்ததை பரஞ்சோதியிடம் சொன்ன போது, அவர் குரலில் வழக்கமான குதூகலம் இல்லை. ஏதோ சரியில்லை என்று பட்டதால் உடனே அம்பைக்கு கிளம்பினான். ஊரில் அவர் உடல் நலிவுற்று படுக்கையில் கிடந்தார். அவனின் ஒரே ஆதரவும் விலகி விடுமோ என்கிற கவலை. ஆனால் அவருக்கோ, மாதவியை தனியாக விட்டுச் செல்கிறோமே என்கிற குற்ற உணர்ச்சி.
பொறி தட்டியது போல அருண், "ஸார், தப்பா நெனச்சிக்கலனா, மாதவிய நான் கல்யாணம் செஞ்சுக்கட்டுமா?" என்று கேட்டு விட்டான். அதனை எதிர்பார்க்காததால், சற்று அதிர்ச்சி ஆனார். "உங்களுக்கு தப்பா தோணலனா, நீங்களே அவ கிட்ட பேசி சம்மதம் வாங்குங்க. அமெரிக்கா போகும் போது அவளையும் கூட்டிகிட்டு போறேன்"
"யோசிக்க கொஞ்சம் அவகாசம் கொடு. நாளைக்கு நீ கெளம்பறதுக்குள்ள முடிவ சொல்றேன்" என்றார். பின்னர் அனைவரும் சாப்பிட்ட பிறகு நெடு நேரம் தனியே மாதிவியிடம் பேசிக் கொண்டிருந்தார். காலை அருண் எழுந்த உடன் அவர் அவனை அழைத்து, "மாதவி கிட்ட பேசிட்டேன். சரின்னு சொல்லிட்டா. அன்னாசாமி கிட்ட சொல்லி அனுப்பினேன். இன்னிக்கே கல்யாணம் வச்சுக்கலாம்" என்றார். அருண் இதனை எதிர்பார்க்கவில்லை.
அவரே தொடர்ந்து, "அருண், எனக்கு உடம்பு சரியில்லை. நான் திடமா இருக்கும் போதே, மாதவிக்கு கல்யாணம் செஞ்சு கொடுத்து அவள சந்தோஷமா அனுப்பனும்னு ஆசைப்படறேன்."
"சரி ஸார். உங்க விருப்பப்படியே ஆகட்டும். இன்னிக்கே செஞ்சுக்குறேன். ஆனா அவள கூட்டி போக ஒரு வாரம் டயம் வேணும். சென்னைக்கு போயி, ஒரு வீட்டை பாத்து ரெடி பண்ணிட்டு வந்து கூட்டிகிட்டு போறேன்"
அன்றைக்கே திருமணம் முடிந்தது. மாலை அருண் ஊருக்கு கிளம்பும் முன் மாதவியிடம்,
"ஒருவாரம் பொறுத்துக்கோ. நான் போய் வீடு பாத்துட்டு வர்றேன். ஸாரையும் கூப்பிட்டு போகலாம். அவர் கிட்ட இப்ப சொல்லாதே...அடம் பிடிப்பார். அடுத்த வாரம் பாத்துக்கலாம்" என்றான்.
மாதவியும் மலர்ச்சியுடன் வழி அனுப்பி வைத்தாள். வரும் நாட்களில் எல்லாம் தலை கீழாகும் என்றும் அவள் நினைத்திருக்க வில்லை.
*****
ஸ்டான்லியில் எல்லோரும் மிக பரபரப்பாக இயங்கிக் கொண்டிந்தார்கள். கொரொணா வார்டெல்லாம் நிரம்பி வழிந்தாலும், நோயாளிகள் வருகை நின்ற பாடில்லை. நிர்வாகம் அவசரமாக கூடி, பழைய கட்டிடத்தில் கூடுதலாக ஒரு வார்ட் திறக்க முடிவு செய்து அலைந்து கொண்டிருந்தார்கள்.
சரவணனுக்கு பதில் சொல்ல ஆளில்லை. அவனும் ஒரு பெஞ்சில் இரண்டு மணி நேரமாக உட்கார்ந்து, வருவோர் போவோரைப் பார்த்துக் கொண்டிருந்தான். பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை, ஹேமாவிடம் இருந்து அழைப்பு. அவளும் அங்கே அழுது கொண்டிருந்தாள். பேச்சியிம் அவளும் அவ்வளவு நெருக்கம். யாராலும் சமாதானம் சொல்ல முடியவில்லை. சுவற்றில் சாய்ந்தபடி கன்ணை மூடிக் கொண்டிருந்த அவனை, ஒரு குரல் அழைத்தது.
"ரொம்ப நேரமா இங்க இருக்கீங்களே ஸார். யாராச்சும் உள்ள அட்மிட் ஆகி இருக்காங்களா? அட்டெண்டர் எல்லாம் இருக்கக் கூடாதுனு ஆர்டர் இருக்கே, யாரும் சொல்லலியா?" என்று ஒரு ஆம்புலன்ஸ் டிரைவர் கேட்டான்.
சரவணன் கண்களை கசக்கிய படி, "இல்ல ஸார். ரெண்டு வாரம் முந்தி என்னோட ரெண்டு சிஸ்டர்ஸ் கொரொணா பாஸிடிவ் ஆகி அட்மிஷனுக்கு வந்தாங்க. ஒருத்தர் வீட்டுக்கு வந்தாச்சு இன்னொருத்தர பத்தி தெரியல. அவங்கள தேடித் தான் வந்தேன். காத்திருக்க சொன்னாங்க" என்றான்.
கேட்டவனுக்கு தூக்கி வாறிப் போட்டது. "என்ன ஸார் சொல்றீங்க. சிஸ்டர பத்தி ஒன்னும் தெரியலியா?" அதிர்ந்தவன், "கொஞ்சம் இருங்க வர்றேன்" என்று சொல்லிவிட்டு உள்ளே போனான். சிறிது நேரம் கழித்து ஒடிசல் தேகமும், முரட்டு முகமும் கொண்ட ஒருவனோடு திரும்பி வந்தான். முகம் தான் முரடாக இருந்தது ஆனால் மென்மையாக பேசினான்..
"ஸார்...என்னிக்கி அட்மிஷன் போட்டாங்க...பேரு என்ன கொஞ்சம் சொல்லுங்க"
"பேச்சியம்மா ஸார்....மே 14 அன்னிக்கு ஆஸ்பத்திரிக்கு வந்தாங்க"
கையில் இருந்த ரிஜிஸ்டரை துழாவினவன்..."அந்த பேருல அந்த தேதியில யாரும் இல்லியே...அடுத்த ரெண்டு நாளிலும் இல்லை....அவங்களுக்கு வேற ஏதாச்சும் பேரு இருக்கா?"
"இல்ல ஸார்...பேச்சியம்மாங்கிறதே நாங்க வச்ச பேரு தான். அவங்களுக்கு கொஞ்சம் புத்தி சுவாதீனம் கம்மி...ஆனா என்னோட இன்னோரு சிஸ்டர் கூட வந்தாள்....பேரு ஹெமா....ஆனா அவளை விடுதிக்கு அனுப்பிட்டாங்களாம்"
வேறொரு ரெஜிஸ்டர புரட்டியவன், "ஆமா, ஹேமா, மே 14 லிஸ்ட்ல இருக்கே...அவங்கள புளியந்தோப்பு விடுதிக்கு இல்ல அனுப்பினாங்க....அவங்க எப்படி இருக்காங்க?"
"அவங்க வீட்டுக்கு வந்துட்டாங்க ஸார்....அவங்க சொல்லித் தான் பேச்சி காணோம்னு தெரிஞ்சுகிட்டோம்...இப்ப என்ன செய்யறதுனு புரியலியே???!!!" என்று பதறத் தொடங்கினான்.
டிரைவர் அவனை சமாதான படுத்தினான். கூட இருந்த கிளார்க், "பொறுங்க ஸார்...இங்க வந்துட்டா எல்லாருமே பத்திரமா இருப்பாங்க. ஒரு வேளை எண்ட்ரி போட்டதில ஏதாச்சும் குழப்பம் இருந்திருக்கும்...தேடிப் பாக்கலாம்...பதறாதீங்க" என்று சொல்லி விட்டு உள்ளே சென்றான். சரவணன், பெஞ்சில் சரிந்தான்.
*****
அருண் புதன்கிழமை வீட்டுக்கு அட்வான்ஸ் கொடுத்து சாவி வாங்கிக் கொண்டான். இரண்டு படுக்கையறை கொண்ட சின்ன வீடு. கண்ணன் டிராவல்ஸை கூப்பிட்டு வெள்ளி இரவுக்கு டிக்கட் போடச் சொல்லிவிட்டு, அலுவலகம் சென்றான். திருமண தகவலும், மாதவியின் தகவல்கள்களையும் பதிவு செய்து கொண்டான். நன்பர்கள் ஓட்டினார்கள்....
"என்ன மாப்ளே....ட்ரீட்டுக்கு பயந்து ரகசியமா கல்யாணம் பண்ணிகிட்டியா...வந்து ரெண்டு நாளாச்சு யாரு கிட்டயும் எதுவும் சொல்லல...என்ன கதை?"
அருண் புண்ணகையுடன், "அதெல்லாம் இல்லடா...எதிர்பாராத சூழல்...சட்டுனு ஆயிடுச்சு...இந்த வாரம் கூட்டிகிட்டு வந்துடுவேன்...கண்டிப்பா எல்லோரையும் கூப்பிடறேன்....மீன் அவ்வளவு ருசியா சமைப்பா? என்றான்.
"பார்றா...டேய் நீ அடிக்கடி ஊருக்கு போனது மீனுக்கா இல்ல மானுக்கா..."
"அட போங்கடா" என்ற படி கேஃப்டீரியாவுக்கு சென்று காபி வாங்கி உட்கார்ந்தான். அலைபேசி அழைத்தது. அம்பையில் இருந்து. எப்பவும் சாயந்திரம் தானே கூப்பிடுவா...இன்னிக்கு என்ன...என்றபடி எடுத்தான்.
"ஏங்க..அப்பாவுக்கு உடம்பு ரொம்ப முடியல...நேத்தியிலிருந்து ஒன்னும் சாப்பிடல...எனக்கு பயமா இருக்கு...வர முடியுமா?" என்றாள் மாதவி.
"ரெண்டு நாள் தான் மாதவி. டிக்கட் போட்டாச்சு. சனி காலைல அங்க இருப்பேன்"
"இல்லீங்க...முன்னாடியே வந்துட்டா நல்லா இருக்கும்னு தோணுது...ப்ளீஸ்..." என்றாள்.
அருண் குழப்பமானான். நேரே மேனேஜரிடம் சென்று நிலைமையச் சொல்லி உடனே கிளம்ப வேண்டும் என்றான். அவரோ...'பாத்து அருண்...நீ அமெரிக்கா போறதுக்குள்ள செய்ய வேண்டியது நெறைய இருக்கு. அடிக்கடி லீவு போட்டா உனக்கு தான் பின்னாடி சிக்கல்...ஜாக்கிரதை"
அருண், ரயில் டிக்கட்டை கேன்ஸல் செய்ய சொல்லிவிட்டு, பஸ் பிடித்து திருநெல்வேலி பயணமானான். மனதுக்குள் ஒருவித தவிப்பு. பரஞ்சோதி ஸாரை கொஞ்ச நாளைக்காவது நம் கூட வைத்திருக்க வேண்டும்.
திருநெல்வேலி சேரும் போது பொழுது நன்கு விடிந்திருந்தது. மாதவியிடம் தகவல் சொல்ல ஆறுமுகம் வீட்டை இரண்டு முறை அழைத்தான். பதிலில்லை. பதற்றம் சற்று கூட, அம்பைக்கு பஸ் ஏறினான். ஒன்றரை மணி நேரம் சென்றது தெரியவில்லை. அம்பை பஸ் ஸ்டாண்டிலிருந்து, ஆட்டோ பிடித்து பேச்சி அம்மன் கோவில் பின்புறம் இருக்கும் வீரன் தெருவுக்கு விரைந்தான்.
பரஞ்சோதி ஸாரின் வீட்டு வாசலில் கூட்டம் இருந்தது. சற்று தள்ளியே ஆட்டோவிலிருந்து இறங்கி நடந்தான். ஆறுமுகம் தான் முதலில் அவனைப் பார்த்தார்.
"என்னங்க ஆச்சு?" என்றான் கலகத்துடன்.
"வாப்பா...பரஞ்சோதி நைட்டு தவறிட்டார்...உனக்காகத் தான் காத்திருக்கோம்...எப்படியும் வந்துடுவேன்னு மாதவி தான் சொன்னா"
அருணுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. பையை சொத்தென்று கீழே போட்டான்.
"நீ முதல்ல போயி மாதவிய பாரு. அவ தான் நைட்டுல இருந்து யார் கூடவும் பேசாம...வெறிச்சு பாத்த படி இருக்கா"
அருண் மெதுவாக நடந்து வீட்டுக்குள் நுழைந்தான். பரஞ்சோதி கீழே கிடத்தப் பட்டிருந்தார். அருகில் அமைதியாக அமர்ந்து இருந்தாள் மாதவி. பக்கத்தில் சென்று தோளை உலுக்கினான். நிமிர்ந்து பார்த்தவள், சில வினாடிகள் அவன் கண்களையே உற்று நோக்கினாள். பின் திடீரென்று ஓவென கத்தத் தொடங்கினாள். சுற்றி இருந்தவர்கள் கலங்கினார்கள்.
அருணுக்கு எதுவும் பேச வரவில்லை. அண்ணாசாமி, 'அவள் கொஞ்ச நேரம் அழட்டும்' என்று சைகை காட்டினார். அருணும், அவளது தலையை கோதியபடியே அமர்ந்திருந்தான்.
அழுது முடித்து ஒரு பெருமூச்சு விட்டபடி, அருணைப் பார்த்து கத்தினாள்.
"ஏண்டா இப்படி செஞ்சீங்க? நான் ஏதாச்சும் கேட்டேனா. நான் பாட்டுக்கு முகாம்ல போட்டத தின்னபடி நாள ஓட்டியிருப்பேனே...தேவையில்லாம இங்க கூட்டி வந்து, எல்லாத்தையும் மாத்தி இப்ப மறுபடி பழைய இடத்துக்கே கொண்டு வந்து விட்டுட்டீங்க. சாவப் பாத்து பழகி காஞ்சு போன கண்லேர்ந்து இப்ப தண்ணி வரவச்சுட்டீங்களே....நல்லா இருப்பீங்களா?"
"அப்படி நெனக்காத மாதவி...நான் இருக்கேன்...கவலைப் படாதே"உக்கிரமாக பார்த்த அவள், சட்டென எழுந்து வேகமாக நடந்தாள். நேரே, பேச்சியம்மன் கோவில் வாசலில் நின்ற படி கோவிலைப் பார்த்தாள். கடுமையாக மூச்சிரைக்க...."பேச்சியம்மா...பேச்சியம்மா"...என்று அரற்றியவள்...சிறிது நேரம் கழித்து தரையில் சரிந்தாள்.
*****
திடீரென்று விழித்துக் கொண்ட சரவணன் சுறும் முற்றும் பார்த்தான். ஆஸ்பத்திரி வாசலில் இப்போது வரிசையாக நிறைய ஆம்புலன்ஸ்கள். எல்லோரும் பரபரப்பின் உச்சத்தில் இருந்தார்கள். இவனை யாரும் திரும்பிப் பார்க்கவேயில்லை.
சற்று நேரம் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்த சரவணன், இதற்கு முன்னால் பேசியவனைப் பார்த்ததும் ஓடிச் சென்று...."ஸார்...நான் தான் ஸார்...தங்கைய தேடி வந்தேனே..." என்றான்.
வேகமாக சென்று கொண்டிருந்தவன் சற்று நின்று...
"ஸார்...திடீர்னு நெறைய கேஸுங்க வர ஆரம்பிச்சுடுச்சு ஸார். இப்ப நேரம் இல்லை..."நீங்க ஓன்னு செய்யுங்க...புளியந்தோப்பு முகாம்ல போயி முதல்ல செக் பண்ணிட்டு வாங்க. இங்க இல்லாட்டி அங்க தான் இருப்பாங்க.." என்று சொல்லியபடி நகர்ந்தான்.
"ஸார்...அங்க தான் என் இன்னொரு தங்கை இருந்தா.." என சரவணன் சொன்னதை அவன் காதில் வாங்க வில்லை.
வெலியே சென்று வண்டியில் அமர்ந்து ஹேமாவுக்கு ஃபோன் செய்தான்.
"என்னை புளிய்ந்தோப்பு முகாம்ல செக் பண்ண சொல்லியிருக்காங்க. நீ அங்க தானே இருந்தே. கிளம்பும் போது விசாரிச்சியா?"
"இல்லியே எனக்கு அது தோணவேயில்லியே. நேரா ஸ்டான்லிக்கு இல்ல போனேன்"
"சரி பரவாயில்லை. நான் அங்க போயி ஒரு நடை பாத்துட்டு வர்றேன்"
"ஏன், ஸ்டான்லியில என்ன சொல்றாங்க...?"
"உன் கிட்ட சொன்னத தான் சொன்னாங்க. எண்ட்ரி போட்டத வேணா திரும்ப ஒரு தடவை செக் பண்ணலாம்னாங்க...திடீர்னு இங்க பேஷண்ட் அதிகமாயிட்டாங்க...அதனால தான் ஒரு தடவை அங்க போயி பாக்க சொன்னாங்க. நான் போயிட்டு வந்துடறேண்"
"அப்படியே அண்ணா நகர் அம்பேத்கர் காலேஜ்லயும் ஒரு முகாம் இருக்காம்...அங்கேயும் போயி பாத்துட்டு வாயேன் ப்ளீஸ்" - ஹேமா கெஞ்சினாள்.
சரவணன் வண்டியை எடுத்து புளியந்தோப்பு நோக்கி சென்றான். மனம் முழுவதும், ஹேமாவைப் பற்றியும் பேச்சியைப் பற்றியும் நினைவு ஓடியது. இந்த அஞ்சு வருஷமா ஹேமாவுக்கு எல்லாம் பேச்சி தான். குடும்பத்தை உலுக்கிய பல நிகழ்வுகளில் இருந்து - முக்கியமாக அவளுக்கு பார்த்த பையன் திருமணத்திற்கு பத்து நாள் முன் விபத்தில் இறந்தது - ஹேமாவின் உலகமே பேச்சி என்றாகி விட்டது. பேச்சியும், மற்றவர்களிடம் அதிகம் பேசமாட்டாள். அப்படியே பேசினாலும் முன்னுக்குப் பின் முரணாக ஏதாவது சொல்லுவாள். திடீரென்று, சில நிமிடங்கள் எதுவும் பேசாமல் எதையாவது வெறித்தப்படி மவுனமாக இருப்பாள். ஆனால் ஒரு முறையும் ஹேமா விடம் அப்படி இருந்ததில்லை.
பேச்சியை சொதித்த டாக்டர், அவளது கடந்த வாழ்க்கையை தெரிந்து கொள்ளாமல் எதுவும் செய்ய முடியாது என்று சொல்லிவிட்டார். மன ரீதியான சில முறைகள் இருக்கு என்று அவர் சொன்னதற்கு ஹேமா மறுத்து விட்டாள்.
புளியந்தோப்பு முகாம் மிகப் பெரியதாக இருந்தது. மற்ற இடங்களில் இருப்பது போல இறுக்கமாக யாரும் இல்லை. அனைவரும் பெரிய அளவு பாதிப்பு இல்லாதவர்கள் எனத் தோன்றியது. இரண்டு ஆம்புலன்ஸ் ஓரமாக நின்று கொண்டிருந்த்தது. வண்டி நிறுத்துமிடத்திலும் பெரிதாக வண்டிகள் எதுவும் இல்லை. சரவணன், வண்டியை நிறுத்திவிட்டு வரவேற்பறைக்கு சென்றான்.
"பேரு பேச்சியம்மா, மேடம். ஸ்டான்லியில இருந்து வந்தாங்களா பாக்கணும்'"
"என்னிக்கி டிஸ்சார்ஜ் ஆனாங்க ஸார்"
"தெரியல மேடம். அங்க அட்மிஷன் எண்ட்ரி இல்லனு சொல்றாங்க"
அந்தப் பெண் நிமிர்ந்து சரவணனை ஒரு மாதிரியாகப் பார்த்தாள்.
"ஸாரி பேடம்...தங்கை எங்க போனானு தெரியல...அவள தேடித்தான் வந்தேன். இன்னொரு தங்கையும் இங்க தான் இருந்தா. நேத்தி தான் வீட்டுக்கு வந்தா. பேரு ஹேமா"
அவள் ரெஜிஸ்டரை புரட்டி..."ஆமா, ஹேமா பேரு இருக்கே. 14ம் தேதி வந்தாங்க...நேத்திக்கு வீட்டுக்கு போனாங்க. அவங்க கூட எட்டு பேரு வந்தாங்க...ஆனா அதுல எதுவும் நீங்க சொன்ன பேரு இல்லியே" என்றாள்.
சரவணன் அமைதியாக குனிந்தபடி கைகளைப் பார்த்தான்.
"ஸார்...பதட்டப் படாதீங்க. என்ட்ரில ஏதாவது தப்பா இருந்திருக்கும். நீங்க ஸ்டான்லியிலேய போயி கேளுங்க. வேணா, 14ம் தேதி அட்மிஷன் போட்டு பின்னாடி டிஸ்சார்ஜ் ஆனவுங்க டீடெய்ல் வாங்கிப் பாருங்க. நிச்சயம் கெடைப்பாங்க. இருங்க நான் ஸ்டான்லியில பேசறேன்"
"ஒரு வேளை அம்பேத்கர் காலேஜ்ல இருப்பாங்களா?"
"இல்ல ஸார். ஸ்டான்லினா நேரா இங்க தான் வருவாங்க. நீங்க அங்கேயே ட்ரை பண்னுங்க. இப்ப நெறை பேஷண்ட் வர ஆரம்பிச்சுட்டதா சொல்றாங்க...ஒரு ரெண்டு நாள் கழிச்சு போயி பாருங்க. தகவல் கெடைக்கும்"
"ரெண்டு நாள் கஷ்டம் மேடம். என் தங்கைக்கு கொஞ்சம் சுவாதீனம் சரியில்ல....சீக்கிரம் கன்டு பிடிக்கணும்"
அந்தப் பெண் கலவரத்துடன் அவனைப் பார்த்தாள்.
*****
வரதராஜபுரம் வீடு வந்து சேர்ந்த போது மழை மெலிதாக பெய்து கொண்டிருந்தது. குளிர் சற்று தூக்கலாக இருந்தது. மாதவியிடம் இருந்தது ஒரே ஒரு பெரிய பெட்டி. பரஞ்சோதியின் புத்தகங்களில் சிலவற்றை அருண் எடுத்து வந்திருந்தான். மற்றவைகளை அங்கேயே நூலகத்திற்கு கொடுத்து விட்டான்.
வாங்கி வந்த பாலைக் காய்ச்சி டீ வடித்து குடித்தபடி இருவரும் ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருந்தார்கள். மணி அடிக்கும் சத்தம் கேட்டு, கதவைத் திறந்தான். வீட்டின் ஊரிமையாளர் நின்றிந்தார். மாதவியை ஏற இறங்க பார்த்தபடி,
"அவங்க வீட்டில யாரும் வரலியா?" என்றார்.
"இல்லை ஸார். அவங்களுக்கும் யாரும் இல்ல, ஆசிரமத்தில வளர்ந்தாங்க"
"அம்பா சமுத்திரத்தில் ஆசிரமம் ஏதாச்சும் இருக்கா என்ன? என் ஃப்ரெண்டு சோமசுந்தரம்னு ஒருத்தன் அங்க தான் இருக்கான்...அவன் ஒன்னும் சொன்ன மாதிரி தெரியலியே?"
மாதவிக்கு அவரை பிடிக்கவில்லை. "உங்க நன்பருக்கு குடும்பம் இருக்கும் போல. அதனால ஆசிரமம் தெரிய வாய்ப்பில்லை" என்றாள் வெடுக்கென்று.
"அதுவும் சரிதான். ஆனா அவன் தான் எப்பவும் எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசுவான்." என்றார். மாதவிக்கு ஒர் கணம் அவர் தன்னையே அப்படி சொல்லிக் கொண்டார் என தோன்றிற்று.
"இந்தாங்க அக்ரீமெண்ட் காப்பி. நீங்க திடீர்னு கிளம்பினதால குடுக்க முடியல" என்றபடி, காகிதங்களை அருண் கையில் திணித்து விட்டு, மாடிக்குச் சென்று விட்டார்.
"எனக்கு இந்த வீடு பிடிக்கல. மாத்திடலாங்க" என்றாள் மாதவி.
அருண் சிரித்தபடி "அடுத்த ஹவுஸ் ஓனர் இத விட ரம்பமா இருந்தா என்ன பண்ணுவ? இது அம்பை இல்ல மாதவி, சென்னை. மெல்ல பழகிக்கத் தான் வேண்டும். கொஞ்ச நாள் தானே, அமெரிக்கா போயிட்டா இந்த சிக்கல் இல்ல" என்றான் அவளை அணைத்தபடி.
மழை சுத்தமாக நின்றிந்தது. "வா மொட்டை மாடி போய் பாக்கலாம்"
இருவரும் மாடிக்குச் சென்றார்கள். மாதவிக்கு கண்கள் விரிந்தன. தீப்பெட்டிகளை அடுக்கி வைத்தாற் போல அத்தனை வீடுகள், கண்ணுக்கு எட்டிய வரை. இத்தனை வீடுகளை மொத்தமா பார்த்திருக்கோமா என்கிற சந்தேகம் வந்தது அவளுக்கு. அதை போலவே மக்கள் கூட்டமும். எதைப் பற்றியும் கவலைப் படாமல் கனுக் காலுக்கும் அதிகமான அளவில் சாலையில் ஓடிய தண்ணீரில் நடந்தபடியே எல்லோரும் சென்று கொண்டிருந்தார்கள்.
அம்பையில் இப்படி இல்லை. மழை வந்தாலே குதூகலம் தான். ஆரம்பம் ஆகும் போதே யார் வீட்டுக்காவது சென்று விடுவாள். இல்லையென்றால் வேறு யாராவது அவர்கள் வீட்டுக்கு வந்து விடுவார்கள். மழை சற்று வலுத்தாலே போதும், கரண்ட் போய்விடும். அதுவரை எதையோ இழந்த மாதிரி இருப்பவர்களுக்கு, கரண்ட் போனதும் குஷி ஆகிவிடும். ஒரே ஆட்டம் பாட்டம் தான். இருட்டும் வரை அங்கேயே இருந்து விட்டு பின்னர் தான் தங்கள் வீடுகளுக்குச் செல்வார்கள். ஆனால் இங்கே அப்படி இல்லை.
"இங்க வாழ்க்கை எந்திரமானது மாதவி. கிடைக்கிற ஒவ்வொரு செகண்டும், நிமிஷமும் முக்கியம். தவற விட்டா பின்னாடி இருப்பவன் தயவே பாக்காம தள்ளி விட்டு போய்விடுவான். எப்பவும் நம்ம இருப்ப எப்படியாச்சும் சொல்லிகிட்டே இருக்கனும்"
இந்த சவாலை எப்படி எதிர் நோக்குவது என்று மாதவிக்கு விளங்கவில்லை. ஆனால், வென்று விட முடியும் என்கிற நம்பிக்கை மட்டும் இருந்தது. கீழே இறங்கி வீட்டிற்குள் வந்து, அவள் துணிகளை அடுக்கினார்கள். அருண், வெளியே சென்று இட்லியும், பொங்கலும் வாங்கி வந்தான்.
"உனக்கு எல்லாம் புரிபடற வரைக்கும் நாம வெளிய வாங்கி சாப்பிட்டுக்கலாம். இந்த ஊரில் அது ஒரு மிகப் பெரிய வசதி".
பரஞ்சோதியின் மரணம், முதல் சென்னைப் பயணம், புதிய இடம், புரியாத வாழ்க்கை முறை, இனிமேல் எப்படி இருக்கப் போகிறோம் என்று பலவற்றை நினைத்தபடி மாதவி கண் அயர்ந்தாள்.
*****
சரவணன் வீட்டுக்குள் நுழையும் போது, ஹாலில் யாரும் இல்லை. களைப்போடு சற்று நேரம் நாற்காலியில் அமர்ந்து காற்று வாங்கினான். ஃபேன் ஓடும் சத்தம் கேட்டு, ஹேமா வெளியே வந்தாள்.
"என்ன ஆச்சு?"
"ஒன்னும் தெரியலமா. ஸ்டான்லியில கூட்டம் அதிகமா இருந்துச்சு. புளியந்தோப்பு போய் பாத்தேன். அங்க இல்லை. ரெண்டு நாள் கழிச்சு வரச் சொன்னாங்க. நீங்க ரெண்டு பேரும் அட்மிட் ஆன அன்னிக்கி யார் யாரெல்லாம் வந்தாங்க எப்ப போனாங்கனு ரிஜிஸ்டர பாத்து சொல்றாங்களாம். கண்டு பிடிச்சுடலாம்".
ஹேமாவுக்கு ஏற்றுக் கொள்ள மனமில்லை. `நமக்கு மட்டும் ஏன் இப்படி? எல்லா தோல்வியும் பாத்துட்ட பிறகு கிடைச்ச ஒரே ஆறுதல் பேச்சி தான். அவளையும் தொலைச்சுட்டோமே. அத்தனை நாள் நல்லா பாத்துட்டு, அன்னைக்கு மட்டு எப்படி கோட்டை விட்டோம்?'
தரையில் அமர்ந்து, முழங்காலில் முகத்தை புதைத்துக் கொண்டாள். ஆனால் அழவில்லை. சரவணனுக்கு அவளைப் பார்க்க பாவமாக இருந்தது.
`இவளுக்கு எதுவுமே நிலைக்காதா?'
ஹேமாவின் திருமணம் நின்ற நொடி சரவணன் மூடிவு செய்து விட்டான். இனி நமக்கும் திருமணம் வேண்டாம். ஹேமாவை பத்திரமாக பார்த்துக் கொள்வதே ஒரே நோக்கம். பேச்சி வந்த புதிதில் அவனைப் பார்த்து மிரளுவாள். ஹேமா கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து சொல்லிய பிறகு தான் சற்றே அவனுடன் யதார்த்தமாக பழகத் தொடங்கினாள். அவன் பங்குக்கு பேச்சியிடம் எவ்வளவு பேசியும், அவள் அங்கு எப்படி வந்தாள் என்பதை கண்டுபிடிக்க மூடியவில்லை. ஒரு கட்டத்தில் அந்த ஆராய்ச்சியை நிறுத்திவிட்டு தனக்கு இரண்டு தங்கைகள் என்கிற முடிவுக்கு வந்து விட்டான்.
இருவரில் ஒருவர் இப்போது எங்கு என்று தெரியவில்லை.
மொபைலில் சந்திரனை அழைத்து விவரம் சொன்னான். அவன் மீண்டும் அழைப்பதாகச் சொல்லி துண்டித்தான். திரும்பி ஹேமாவைப் பார்க்கயில் இப்போது அவள் பார்வை நேரே நிலை குத்தி இருந்தது. அவள் வெறித்தபடி பார்த்தது இருந்தது பேச்சியை நினைவு படுத்தியது. அவள் பக்கத்தில் சென்று தரையில் அமர்ந்து தலையை கோதிவிட்டான். ஹேமா ஒரு முறை அவன் பக்கம் திரும்பிப் பார்த்து, பின் பழையபடி வெறித்து நோக்கினாள்.
மொபைல் அழைத்தது. சந்திரன்!
பேசி முடித்தான். ஹேமா திரும்பி `என்ன?' என்பது போல் பார்த்தாள்.
"சந்திரனுக்கு தெரிந்த ஒருவர் ஸ்டான்லியில் இருக்கிறாராம். நாளைக்குப் போய் விசாரிச்சு கண்டுபிடிச்சிடலாம்னு சொல்லியிருக்கான்".
ஹேமா சரவணின் தோளில் சாய்ந்து கொண்டாள்.
*****
அருண் பதற்றத்தின் உச்சத்தில் இருந்தான். சாலையில் ஓடிய நீரின் அளவு அதிகமாகும் என்ற தகவல் வரவே, அந்த பகுதி மக்களை மொத்தமாக கொண்டு வேறு இடத்திற்கு செர்க்கும் முயற்சியில் அரசாங்கம் தீவிரமானது.
"ஸார், என் மனைவி ஊருக்கு புதுசு. நேத்திக்கி தான் வந்தா. காலையில போட்ல கூட்டிகிட்டு போனாங்க. அங்கேயே என்னையும் கொண்டு விட்டுடுங்களேன்" என அழைத்துப் போக வந்தவரிடம் கெஞ்சினான்.
"ஸார், அதெல்லாம் இப்ப பிரச்சனை இல்லை. முதல்ல நீங்க பத்திரமா ஒரு இடத்துக்கு போயிடுங்க. நிலைமை சரியானதும், அரசாங்கமே திரும்ப கொண்டு வந்து விட்டுறும்"
"ஆனா, அவங்களுக்கு அட்ரெஸ் எதுவும் தெரியாது ஸார். கிராமத்திலேயே வளந்துட்டா. முழுசா ஒரு நாள் கூட ஆகலை. நான் தான் வழி சொல்லனும்"...என்று அவன் கூறியதை,அவர் கேட்ட மாதிரியே தெரியவில்லை.
சுற்றிலும் பார்த்தான். அங்கு இருந்த நான்கு போட்டுகளிலும் ஏறுவதற்கு எல்லோரும் அவசரம் காட்டினர். பின்னாலேயே MLA வின் ஏற்பாட்டின் பேரில், மேலும் இரண்டு போட் வந்து, அவரது ஆட்கள் வேலையை துரிதப் படுத்தினார்கள்.
`இல்லை...இவர்களோடு போனால் மாதவியை கண்டுபிடிப்பது சிக்கல் தான். எப்படியும் மெயின் ரோட் போய்விட்டால் போதும், நாமே தேடி கண்டுபிடிக்கலாம்' என்று நினைத்தபடி, மெல்ல அந்த கூட்டத்திலிருந்து விலகி நடக்கத் தொடங்கினான்.
அனைவரும் சீக்கிரம் வேறு இடம் செல்ல வேண்டும் என்கிற பரபரப்பில் இருந்ததால், யாரும் அவனை கவனிக்க வில்லை. முழங்கால் அளவு தண்ணீரில் மெதுவாக நடந்து சென்று, மெயின் ரோட்டை இணைக்கும் சாலைக்கு திரும்ப நினைத்தான். ஒவ்வோரு படகாக அவனைத் தாண்டிச் சென்று கொண்டிருந்தது. அனைத்தும் போன பின், ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது என்று அவன் உள்ளுணர்வு சொல்லிற்று. திரும்பி வந்த வழியை நோக்கினான். மேல்ல தண்ணீர் வேகம் கூடுவது, கண் கூடாக தெரிந்தது.
அதற்கு சாலையை கடக்க வேண்டும் என்று எண்ணி இரண்டு அடி எடுத்து வைத்தான். குறுக்கே சென்ற தண்ணீரின் வேகத்திற்கு ஏடு கொடுக்க முடியவில்லை. சில வினாடிகள் அசையாமல் நின்று கொண்டிருந்தவன் மெதுவாக ஒரு காலை தூக்கினான். வேகத்திற்கு மற்றொரு கால் ஈடு கொடுக்க முடியாமல் தடுமாறி சொத்தென்று தண்ணீரில் விழுந்தான். மிகவும் பிரயத்தனப்பட்டு நீர்ல் நீந்த முயன்றான்.
அடித்து வரப்பட்ட மரக் கிளைகள், கேபிள் ஒயர்கள், பிளாஸ்டி எச்சங்கள், இன்னும் என்னென்னவோ குப்பைகள் அவனது முயற்சிக்கு தடை போட்டன. மாதவி, மாதவி என முனகியபடி தவித்தான். தண்ணீரின் வேகம் வென்றது. மற்ற குப்பையோடு அவனும் வேகமாக அடித்துச் செல்லப்பட்டான். ஓட்டத்தின் போக்கில் இருந்து மாற அவன் எடுத்த எந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை. அப்படியே வேகமாக அடித்துச் செல்லப்பட்டவன், ஒரு திருப்பத்தில் அருகில் இருந்த மின் கம்ப அடித்தளத்தில் மோத, அதனை அணைத்த படி எழுந்திருக்க நினைக்கையில் முடியாமல் நிலைகுலைந்து, கம்பத்தை அணைத்த படியே சரிந்தான்.
இதனை எதுவும் அறியாத மாதவி, ஒரு காப்பகத்தில் அமர்ந்திருந்தாள். அவளுக்கு கொடுக்கப்பட்ட பன்னும், பாலும் அப்படியே இருந்தது. நேரே சுவற்றை வெறித்த படி, "பேச்சியம்மா, பேச்சியம்மா" என முனுமுனுத்தாள். சிறிது நேரம் அவளையே பார்த்துக் கொண்டிருந்த அவள் பக்கத்தில் அமர்ந்திருந்த வயது ஒத்திருந்த பெண், சற்று நெருங்கி சென்று அவளை உலுக்கி,
"இதை சாப்பிடறது தானே..." என்றபடி பாலை எடுத்து அவளை நோக்கி நீட்டினா.
திரும்பிப் பார்த்த மாதவி, அவள் முனுனுப்பை தொலைக்காமல், அந்த பெண்ணின் தோளில் சாய்ந்து கொண்டாள்.
*****
காலை ஏழு மணிக்கே சந்திரன் வந்து விட்டான். சரவணன் கிளம்பும் வரை வாசலில் நின்றபடி மாறி மாறி யாருக்கோ ஃபோன் செய்தான்.
வாசலில் வந்து நின்ற ஹேமாவைப் பார்த்து, "கவலைப் படாதேம்மா...போலீஸ்லயும் சொல்லியிருக்கேன்...எப்படியாவது கண்டு பிடிச்சிடலாம்...நீ டென்ஷன் ஆக வேண்டாம்" என்றான்.
சரவணன் வந்து வண்டியில் ஏற, இருவரும் ஸ்டான்லியை நோக்கி புறப்பட்டனர்.
*****
தண்ணீர் நன்கு வடிந்ததும், கம்பத்தை அணைத்தபடி மயங்கி கிடந்த அருணை பார்த்தவர்கள், குரோம்பேட்டை ஜிஹெச்சுக்கு சொல்லி அனுப்பினார்கள்.
அவர்கள் வந்து ஆம்புலன்ஸில் அவனை அள்ளிக் கொண்டு போனார்கள்.
*****
சந்திரன் உல்ளே சென்று யாரிடமோ பேசிவிட்டு வந்து, மொபைலை எடுத்து யாருக்கோ மீண்டும் பேசினான்.
"சரி டாக்டர். ரிசப்ஷன்ல தான் இருக்கோம். வெயிட் பண்றோம்" என்று சொல்லிவிட்டு சரவணனிடம் திரும்பி "டாக்டர் ரவிஷங்கர் கிட்ட பேசினேன். இருபது நிமிஷத்துல வெளிய வர்றேன்னு சொல்லியிருக்கார்" என்றான்.
ஆஸ்பத்திரியில் கூட்டம் முந்தைய தினம் போலவே இருந்தது. உள்ளே வருவோர் அனைவரின் முகத்திலும் கவலை ரேகைகள். அவர்களைப் பார்க்க பார்க்க சரவணனுக்கு சங்கடமாக இருந்தது. சிறிது நேரத்தில் டாக்டர் வெளியே வந்தார்.
"சொல்லுங்க, என்ன ஆச்சு?"
அணைத்தையும் சரவணன் சொல்லி முடிக்க, குழப்பமாக பார்த்தார் டாக்டர்.
"இங்க யாரும் மிஸ் ஆக மாட்டாங்களே ஸார். ஒரு வேளை டிஸ்சார்ஜ் ஆகி அட்ரெஸ் தெரியாமல் வேறு எங்காவது பொயிருப்பாங்களோ" என்று சொல்லி கலவரமூட்டின்னார். அவர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு ரிசப்ஷனுக்கு பின்னால் இருக்கும் காத்திருக்கச் சொல்லிவிட்டு, துரைக்கு சொல்லி அனுப்பி, "துரை தான் இங்க பேஷண்ட் டீடெய்ல பாத்துக்குறார். அவரு கிட்ட சொல்லியிருக்கேன். ஏதாவது தேவைனா என்ன கூப்பிடுங்க" என்று கூறிச் சென்று விட்டார்.
துரை ரெஜிஸ்டருடன் வந்தான்.
"எந்த தேதி ஸார்? பேரு, வயசு சொல்லுங்க"
"பதினாலாம் தேதி ஸார். பேரு பேச்சியம்மாள், வயசு இருவத்தி அஞ்சு"
பக்கத்தை துழாவினவன்..."பாண்டியம்மாள்னு இருக்கே...ஒரு வேளை தப்பா எழுதி இருப்பாங்களோ? இருங்க கேஸ் ஹிஸ்டரிய்ல பாத்துடலாம்" என்றான்.
சரவணனுக்கு சற்று தெம்பு வந்தது. 'ஆம். பேரை தான் மாற்றி எழுதியிருக்கிறார்கள். ஹேமா சொன்னதை காதில் சரியாக வாங்கியிருக்க மாட்டார்கள். கெடச்சுடனும். கெடச்சா ஒரு தரம் போய் திருத்தணியில மொட்டை போட வேண்டும்' என்று மனதுக்குள் எண்ணியபடி காத்திருந்தான்.
கேஸ் ஹிஸ்டரி வந்ததும் அதனைப் புரட்டி, உதட்டை சுழித்தான்.
"இல்ல ஸார், அந்த பேஷண்டுக்கு அறுவத்தி ஏழு வயசு. அது இல்ல நாம் தேடறது"
சில நிமிடங்கள் மட்டுமே நீண்ட சரவணின் நம்பிக்கை நொறுங்கியது.
பக்கத்தில் இருந்த சந்திரன் "ஸார்...அன்னைக்கு தேதியில இருபத்தி அஞ்சு வயச ஒட்டி யார் யாரெல்லாம் இருக்காங்க பாருங்க. டிஸ்சார்ஜ் ஆகாம இருந்தாங்கனா நேர்ல பாக்கறோம். இல்லனா அட்ரெஸ் குடுத்தா நேரே போய் விசாரிச்சுக்கிறோம். கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க ஸார்"
துரை, சந்திரனை உற்று நோக்கியபடி, "பேஷண்ட் தகவெலெல்லாம் ரகசியமா வைக்கனும் ஸார். சொல்லக் கூடாது. ஆபீஸர்களுக்கு தெரிஞ்சா சிக்கலாயிடும்"
"இல்லை ஸார். நீங்க தான் குடுத்தீங்கனு நான் சத்தியமா யார் கிட்டயும் சொல்ல மாட்டேன்" சந்திரன் கெஞ்சினான்.
துரை ஒரு காகிதத்தை எடுத்து, ஒவ்வோரு பெயரும், விலாசமும் எழூதினான். இது எதையும் கவனிக்காத சரவணன் கண்ணீருடன் சுவற்றில் சாய்ந்து நின்று கொண்டிருந்தான்.
"இந்தாங்க ஸார். டிஸ்சார்ஜ் ஆனவுங்க லிஸ்டு. தயவு செஞ்சு என்னை காட்டிக் குடத்திடாதீங்க" என்றபடி காகிதத்தை நீட்டினான்.
சந்திரன், சரவணின் தோளை உலுக்கி "லிஸ்டு கெடச்சுடுச்சு. கமிஷ்ணர் ஆபீஸ்ல தெரிஞ்சவர் ஒருத்தர் இருக்காரு. முதல்ல அவர் கிட்ட போயி என்ன பண்ணலாம்னு கேக்கலாம். கம்ப்ளெய்ன்ட் குடுக்க தேவையிருக்காது. பாத்துக்கலாம்" என்றபடி அவனை அழைத்துக் கொண்டு வண்டியை நோக்கி சென்றான்.
அவர்கள் நின்றிருந்த அறையின் நேர் மேலே இருந்த ஒரு அறையில், படுக்கையில் சலனமற்று படுத்துக் கிடந்த அருணின் பக்கத்தில் அமர்ந்தபடி அவனது தலைமுடியை மெதுவாக கோதிவிட்டாள் பேச்சியம்மாள். ஆனால் இனிமேலும் அவள் பேச்சி அல்ல,. ஐந்து வருடம் நித்தம் நித்தம் மனதுக்குள் யாரோடு வாழ்ந்து வந்தாளோ, அந்த அருணை இனி ஒருமுறை கூட பிரியக்கூடாது என்று முடிவு செய்திருந்த மாதவி!!!
இத்தனை நாள் உற்ற தோழியாக இருந்த ஹேமாவிடம் கூட சொல்லிக் கொள்ளவில்லை. அதனால் என்ன?
ரூமி சொன்னது போல, "ஊணோடு கலந்தவர்களுக்குள் பிரிவு என்பதில்லை"