சோம்பல் என்பது எனது தனி குணம். ஆனால், அதற்கு உரம் போட்டு நன்கு வளர்த்து விட்டவர் மறைந்த எம் தந்தை. அலுவல் நிமித்த வெளியூர் செல்லும் போது, எமது உள்ளாடைகள் முதற் கொண்டு பையில் எடுத்து வைத்து, பின்பு திரும்பியதும் அவற்றை பையினின்று எடுத்து துவைக்கப் போடுவது என்று, எதனையும் நான் செய்ய வழி இல்லாமல் அவரே செய்து விடுவார்.
சலவை சட்டை ஏதும் இல்லாத போது, வெளியே செல்ல வேண்டும் என்றால், அயர்ன் பாக்ஸ் எங்கிருக்கிறது என்று கேட்பது மட்டுமே என் வேலை. சில நிமிடங்களில், நான் எடுத்து வைத்த சட்டை அயர்ன் செய்யப் பட்டு ஹேங்கரில் தொங்கும். இது போன்ற சிறு சிறு வேலைகளை கூட வெட்கமே இல்லாமல் நேரடியாகவோ மறைமுகமாகவோ நான் கேட்பதும் துளி சலிப்பு ஏதும் இல்லாமல் அதனை அவர் செய்து கொடுப்பதும் வாடிக்கை - இது 2009ல் அவர் பக்கவாதம் வந்து படுத்த வரை.
அன்றைய தினமும் நான் தூத்துக்குடி செல்ல எனக்கு எல்லா வற்றையும் எடுத்து வைத்தவர் அவர் தான் - ரயிலில் சாப்பிட இட்லி மடித்துக் கொடுத்த வரை. அதுவே அவர் எனக்கு செய்த கடைசி பணிவிடை. இவற்றுக்கு கைமாறாக அவர் படுக்கையில் இருந்த ஐந்து வருடங்களில் ஏதேனும் செய்து இருக்கிறேனா என்று எனக்கே நான் பல முறை கேட்டுக் கொண்ட கேள்விகளுக்கு திருப்தியான பதில் வந்த்து இல்லை என்று தான் தோன்றுகிறது.
அவர் கணக்கு வைத்திருந்த இந்தியன் வங்கி ப்யூன், அருகில் உள்ள மளிகை கடை அண்ணாச்சி (எல்லா நடுத்தர வர்க்கம் போல நாங்களும் அவசர தேவைகளுக்கு தான் அவர் கடைக்கு செல்வோம், மற்றபடி டிபார்ட்மென்டல் ஸ்டோர் தான்), அக்கம் பக்கம் உள்ள சிறு கடைகளுக்கும், அலுவலகங்களுக்கும் சைக்கிளில் சென்று டீ கொடுப்பவர், வீட்டில் சிறு சிறு மராமத்து பணி செய்து கொடுக்கும் நபர் போன்ற நாம் பொதுவாக அதிகம் முக்கியத்துவம் கொடுக்காதவர்கள், அவர் உடல்நிலை குறித்தும், அவர் இறந்த பின்னும் தன்னார்வமாக கவலை பட்டதை கண்ட போது தான், அவரது ஆளுமையை அருகில் இருந்தும் ரசிக்கவோ, கற்றுக் கொள்ளவோ இல்லை என்று தோன்றியது.
1990ல் முதன் முதலில் நான் வேலைக்கு சேர்ந்த சில நாட்களில், என்னைத் தேடி என் தந்தை வந்திருக்கிறார் என்று கேட்டதும், பதற்றத் தோடு கீழே இறங்கி வந்தேன். மெதுவாக என் தோளில் கை வைத்து, "ஒன்னும் இல்லே, இன்னிக்கு சாம்பாரில் உப்பு போட அம்மா மறந்து விட்டாள். அதனால் நீ கொண்டு வந்ததை சாப்பிடாதே. அதற்கு பதில் இதை சாப்பிடு" என்ற படி பைக் பெட்டியில் இலையில் மடித்து வைத்த சாம்பார் சாதத்தை எடுத்தார். அது மிக சூடாக கட்டப்பட்டு அவசர அவசரமாக மடிக்கப் பட்டு இருந்த்தால் பெட்டியும், சாதமும், வாழை இலையும் ஒன்றோடு ஒன்று உறவு கொண்டு பிரிய மறுத்தன. கவலையோடு என்னைப் பார்த்த அவர், சட்டைப் பையில் இருந்து ஒரு 20 ரூபாயை எடுத்து என் பையில் திணித்து, "இன்னிக்கி மட்டும் நீ வெளியே சாப்பிட்டுக்கோ" என்று தன் குற்ற உணர்ச்சியை என் செல்களில் ஏற் விட்டு சென்று விட்டார்.
அதன் விளைவாக, கிட்டத் தட்ட 26 ஆண்டுகளில் ஒரு முறை கூட உணவில் உப்பு இல்லை என்றால் அதனை குறை சொன்னதும் இல்லை, மற்றவர்களைப் போல, உப்பு கலந்து கொள்வதும் இல்லை. இதனை தவிர அவருக்கு எந்த வகையில் நான் நன்றி சொன்னதாக நினைவில் இல்லை. ஆனால், அவர் எனக்கு செய்ததற்கு ஒப்பீட்டு அளவில், நான் செய்தது ஒரு உப்பு சப்பு அற்ற நன்றி தான்.
மேற்கத்திய கலாச்சாரம் போல தந்தையர் தினம் பொன்றவை என்னை கவருவது இல்லை. ஆனால், அவர் இறந்த பிறகு, எப்போதெல்லாம் அவரை நினைக்கிறேனோ, அப்போதெல்லாம் என் கண்கள் குளமாவதை தடுக்க முடிய வில்லை என்பதால், அவரை பற்றி நினைக்கும் நாள் எல்லாம், எமக்கு தந்தையர் தினமே!!!