இந்த புத்தகம், "உனது பல அகக் கதவுகளை திறக்க வல்லது!" என்பது தான் நன்பர் பாலா, இப்புத்தகத்தை எனக்கு அறிமுகம் செய்து வைக்கும் போது எனக்கு சொல்லியது! சொன்னது 90 களின் மத்தியில்.
நாங்கள் இருவரும் அன்று ஒன்றாக பணி புரிந்தது பிராமணர் ஆதிக்கம் நிறைந்த ஒரு தனியார் நிறுவனத்தில். சாஸ்திரங்களும் சம்பிரதாயங்களையும் பற்றியே நிறைய பேசும் மக்கள் மத்தியில், பெரியாரியலை பேசிய நாங்கள் இருவரும் சட்டென்று ஒட்டிக் கொண்ட நிகழ்வு ஒன்றும் அதிசயமானது அல்ல (அதன் பின் சுமார் பத்து வருடம் கழித்துத் தான் பெரியாரை முழுமையாக அறியத் தொடங்கினேன் என்பது வேறு கதை)
சொன்ன நாளன்றே (க்ரியா பதிப்பகம் என்று நினைவு!), புத்தகத்தை வாங்கி முழு மூச்சில் முடித்தும் விட்டேன்.
மூன்று நாட்கள் கழித்து, வெளியூர் பயணம் முடித்து திரும்பி வந்த பாலாவிடம் ஆர்வமாக ஒடிச் சென்று, புத்தகத்தை படித்து விட்டேன் என்று சொன்னேன். "அதற்குள்ளாகவா?" என்று கேட்டார். "ஆம்" என்றேன், மனதினுள் நாவலைப் பற்றி ஏராளமான கேள்விகள் வைத்துக் கொண்டு!
ஏற இறங்க என்னைப் பார்த்து விட்டு பாலா சொன்னது, இன்னும் பசுமையாக நினைவிருக்கிறது!,
"I think, you are flying high colours now. வாழ்க்கையில் சிக்கல்கள் வந்த பின் இந்த நாவலைப் படி, அதன் உட் பொருள் புரியும்" என்றார்!
அதற்குப் பின், நான்கு அல்லது அய்ந்து முறை அந்த நாவலை படித்து விட்டேன். எத்தனை முறை முழுமையாக படித்தேன் என்று நினைவில் இல்லை. சர்வ நிச்சயமாக அனைத்து அகக் கதவுகளையும் திறக்கும் மந்திரக் கோளை தன்னுள்ளே கொண்டுள்ளது இந்த நாவல்!
இன்றும் ஒரு முறை புரட்டிப் பார்த்தேன்!
உலக புத்தக தின வாழ்த்துக்கள்!!!
